பா.ஜ.க.வுக்கு எதிராக தனக்குத்தானே பெல்ட்டால் அடித்துக் கொண்ட ஆம் ஆத்மி நிர்வாகி
1 min read
Aam Aadmi Party executive who beat himself with a belt against BJP
7.1.2025
குஜராத்தில் சூரத் நகரில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் அரசியல் பொதுக்கூட்டம் ஒன்று நடந்தது. இதில், அக்கட்சியை சேர்ந்த தேசிய இணை செயலாளரான கோபால் இத்தாலியா கலந்து கொண்டார். அவருடைய பேச்சை கேட்பதற்காக திரண்டிருந்த கூட்டத்தினரின் முன்பு பேசிய அவர், திடீரென இடுப்பில் அணிந்து இருந்த பெல்ட்டை கழற்றி தனக்குத்தானே அடித்து கொண்டார்.
அப்போது சுற்றியிருந்தவர்கள் ஓடி சென்று அவரை தடுக்க முயன்றனர். மேடையில் பேசிய அவர், பா.ஜ.க. ஆட்சியை குற்றம் சாட்டினார். பா.ஜ.க. தலைவர் ஒருவருக்கு அவதூறு ஏற்படுத்த முயன்றார் என கூறி பெண் ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதுபற்றி கூறிய அவர், பா.ஜ.க.வின் ஆட்சியின் கீழ் ஊழல்வாதிகளாக உள்ள தலைவர்கள் மற்றும் அதிகாரிகளால் மக்களுக்கு நீதி கிடைப்பது கடினம் என்றாகி விட்டது. பா.ஜ.க. ஆளும் குஜராத்தில் நீதி இல்லை. இதற்காக நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என்று கூறியபடியே பெல்ட்டால் அவர் அடித்து கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், குஜராத் பல சம்பவங்களை பார்த்து விட்டது.
மோர்பி பாலம் இடிந்து விழுந்தது, வதோதராவில் படகு விபத்து, பல்வேறு கள்ளச்சாராய சோகங்கள், தீ விபத்துகள் மற்றும் அரசு பணியாளர் தேர்வில் வினாத்தாள் கசிவு என பல விசயங்கள் நடந்தபோதும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க செய்ய என்னால் முடியவில்லை என பெல்ட்டை கொண்டு அடிப்பதற்கு முன் பேசினார்.
சமீபத்தில் பா.ஜ.க.வின் தமிழக தலைவர் அண்ணாமலை, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சவுக்கால் அடித்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பார்க்கப்பட்டது.