தி.மு.க.வுக்கு மட்டும் அனுமதியா? போலீஸ் கமிஷனருக்கு எதிராக பா.ஜ.க, பா.ம.க., வழக்கு
1 min read
DMK, only allowed to protest? BJP, PMK file case against Police Commissioner
8.1.2025
எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்கு அனுமதி கொடுக்காமல், கவர்னருக்கு எதிராக தி.மு.க.,வின் போராட்டத்திற்கு மட்டும் அனுமதி வழங்கி சென்னை போலீஸ் கமிஷனர் விதிமீறலில் ஈடுபட்டுள்ளார் எனக்கூறி சென்னை ஐகோர்ட்டில் பா.ம.க., பா.ஜ.க, சார்பில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற அ.தி.மு.க., பா.ஜ.க, பா.ம.க., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதேநேரத்தில் கவர்னருக்கு எதிராக தமிழகம் முழுவதும் தி.மு.க.,வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக அனுமதியின்றி கூடியதாக அக்கட்சியினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த போராட்டத்திற்கு மட்டும் அனுமதி கொடுத்தது எப்படி என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பத் துவங்கி உள்ளன.
இந்நிலையில், ஆளுங்கட்சி போராட்டத்திற்கு மட்டும் அனுமதி கொடுத்து விதிமீறலில் ஈடுபட்டதாக கூறி சென்னை போலீஸ் கமிஷனருக்கு எதிராக பா.ம.க., சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
மேலும் பா.ஜ., சார்பிலும் போலீஸ் கமிஷனருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அந்த மனுவில், அரசியலமைப்பு சட்டத்தை மீறும் வகையில் போலீஸ் கமிஷனர் ஒரு தலைபட்சமாக செயல்பட்டதாக கூறப்பட்டு உள்ளது.