எச்.எம்.பி.வி.-க்கு பிரத்யேக சிகிச்சை இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
1 min read
There is no specific treatment for HMBV infection – Minister M. Subramanian
8.1.2025
நடப்பாண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 3-வது நாளான இன்று எச்.எம்.பி.வி. தொற்று குறித்து சட்டசபையில் விளக்கம் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், எச்.எம்.பி.வி. வைரசுக்கு அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார். மேலும் அவர் கூறியதாவது:-
சீனாவில் பரவிவரும் எச்.எம்.பி.வி. வைரஸ் 50 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்டது. இந்த வைரசால் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட இருவர் நலமுடன் உள்ளனர். எச்.எம்.பி.வி. தொற்று குறித்து அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. காய்ச்சல், சளி பாதிப்புள்ளோர் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது நல்லது.
எச்.எம்.பி.வி. வைரஸ் சாதாரணமான ஒன்றுதான்; வீரியத் தன்மை உள்ள வைரஸ் இல்லை. இதற்கென பிரத்யேக மருந்துகளும் இல்லை. பிரத்யேக சிகிச்சையும் இல்லை. 4 அல்லது 5 நாட்களில் அதுவாகவே சரியாகிவிடுகிறது. பெரிய அளவில் பயப்படத் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.