கனடா பிரதமர் பதவிக்கு இந்திய வம்சாவளி எம்.பி. சந்திரா ஆர்யா போட்டி
1 min read
Indian-origin MP Chandra Arya to run for Canadian Prime Minister
11/1/2025
கனடா நாட்டின் பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ கடந்த 2015-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். இந்த சூழலில் அண்மை காலமாக சொந்த கட்சியிலும், நாட்டு மக்கள் மத்தியிலும் அவரது செல்வாக்கு சரிய தொடங்கியது.
இந்த நிலையில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக ஜஸ்டின் ட்ரூடோ கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார். எனினும் புதிய பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை அவர் பிரதமராக தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவை பொறுத்தவரை ஆளும் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படுபவரே பிரதமராக பதவியேற்பார். அந்த வகையில் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பை வருகிற மார்ச் 9-ந் தேதி நடத்த ஆளும் லிபரல் கட்சி முடிவு செய்துள்ளது. இதில் அதிக வாக்குகள் பெறுபவர் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். அவரே கனடாவின் புதிய பிரதமராகவும் பதவியேற்பார்.
இந்த நிலையில் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக லிபரல் கட்சி எம்.பி.யும், இந்தியருமான சந்திரா ஆர்யா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில் பிறந்தவரான சந்திரா ஆர்யா, தற்போது கனடாவின் ஒட்டாவா மாகாண எம்.பி.யாக இருந்து வருகிறார்.
பிரதமர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து சந்திரா ஆர்யா எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “கனடா தனது தலைவிதியை முழுமையாகக் கட்டுப்படுத்த வேண்டிய நேரம் இது. கனடாவை ஒரு இறையாண்மை கொண்ட குடியரசாக மாற்ற விரும்புகிறேன். இதை சாத்தியமாக்கக ஒதுக்கீட்டின் அடிப்படையில் அல்லாமல் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மந்திரிசபையுடன் ஒரு சிறிய மற்றும் திறமையான அரசாங்கத்தை வழிநடத்த விரும்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இதுவரையில் சந்திரா ஆர்யா மற்றும் முன்னாள் எம்.பி பிராங்க் பெய்லிஸ் ஆகிய இருவர் மட்டுமே பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதை முறையாக அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.