மாணவிகள் கழிவறையை சுத்தம் செய்த விவகாரம்: அரசு பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்
1 min read
Government school headmistress suspended over student toilet cleaning scandal
12.1.2024
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பெருங்காடு மலை கிராமம் உள்ளது. இந்த பகுதியில் 150 குடும்பங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 150 மாணவ, மாணவிகள் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படித்து வருகிறார்கள்.
இந்த பள்ளியில் தலைமை ஆசிரியையாக கலைவாணி பணிபுரிந்து வருகிறார். இவருடன் 5 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறையை சுத்தம் செய்வது, கழிவறைக்கு தண்ணீர் நிரப்புவது, பள்ளியை தூய்மைப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை செய்ய வேண்டும் என்று 5-ம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகளை ஆசிரியர்கள் கூறியதாக தெரிகிறது. இது குறித்து மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் கூறியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கல்வி கற்பதற்காக பள்ளிக்கு அனுப்பப்படும் மாணவ-மாணவிகளை துப்புரவு பணியில் ஈடுபடுத்தும் ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். மேலும் ஆசிரியர்கள் முறையாக பாடம் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இந்த புகாரின் பேரில் கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்த தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து பெருங்காடு அரசு நடுநிலைப்பள்ளிக்கு தர்மபுரி கல்வி மாவட்ட அலுவலர் தென்றல் நேரில் சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தினார்.
இதேபோல் பாலக்கோடு தாசில்தார் ரஜினி, போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி ஆகியோரும் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது பள்ளி மாணவிகளை ஆசிரியர்கள் கழிவறையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இது தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியை கலைவாணியை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து கல்வி மாவட்ட அலுவலர் தென்றல் உத்தரவிட்டார்.