July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

உ.பி.யில் மகா கும்பமேளா தொடங்கியது

1 min read

Maha Kumbh Mela begins in UP

13.1.2025
மகா கும்பமேளா என்பது, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பிரமாண்ட திருவிழா. இந்துக்கள் கொண்டாடும் பல்வேறு விழாக்களில் மகா கும்பமேளா என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ், உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார், மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜைனி, மராட்டிய மாநிலம் நாசிக் ஆகிய 4 இடங்களில் வெவ்வேறு காலக்கட்டங்களில் கும்பமேளா நடைபெறும்.
இருந்தாலும் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகள் ஒன்று கூடும் இடமான திரிவேணி சங்கமம் அமைந்துள்ள பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும் கும்பமேளாவே மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதிலும் இந்த ஆண்டு நடைபெறுவது 144-வது மகா கும்பமேளா என்பதால் கூடுதல் சிறப்பை பெற்றுள்ளது.
கும்பமேளா நடைபெறும் நாட்களில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவதை இந்துக்கள் தங்களது வாழ்நாளில் பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள். அவ்வாறு நீராடுவதால் இப்பிறவியின் பாவங்கள் நீங்கி மோட்சம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த மகா கும்பமேளா பிரயாக்ராஜ் நகரில் இன்று கோலாகலமாக தொடங்கியது. இந்த விழா அடுத்த மாதம் 26-ந்தேதி வரை 45 நாட்கள் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளவும், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடவும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சாதுக்கள், துறவிகள், அகோரிகள் மற்றும் பக்தர்கள் பிரயாக்ராஜ் நகரில் வந்து குவிந்தவண்ணம் உள்ளனர்.
ஜனவரி 13-ந் தேதியான இன்று முதலாவதாக நடக்கும் ஸ்நானம் பவுச பூர்ணிமா ஸ்நானம், நாளை 15ல் மகர சங்கராந்தி ஸ்நானம், ஜனவரி 29ல் மவுனி அமாவாசை ஸ்நானம், பிப்ரவரி 3ல் வசந்த பஞ்சமி ஸ்நானம், பிப்ரவரி 12ல் மாசி பூர்ணிமா ஸ்நானம் மற்றும் பிப்ரவரி 26ல் மஹா சிவராத்திரி ஸ்நானம் என்றும் பக்தர்களாலும் துறவிகளாலும் கடைப்பிடிக்கப்படுகிறது.
கும்ப மேளா அன்று அகாராஸ் பாரம்பரிய ஊர்வலத்தில் கலந்து கொள்வார்கள். ஊர்வலத்தின் போது யானைகள், குதிரைகள், தேர்கள் உள்ளிட்டவையும் இடம் பெறும். இந்நிகழ்வின் போது நாக சாதுக்கள் கலந்து கொண்டு பல மத சடங்குகளை பின்பற்றுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.