திருப்பதி கோவில் லட்டு விநியோக மையத்தில் திடீர் தீ விபத்து
1 min read
Sudden fire breaks out at Tirupati temple laddu distribution center
13.1.2025
திருப்பதியில் அமைந்துள்ள ஏழுமலையான தரிசிக்க தினந்தோறும் ஆயிரகணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்து செல்கின்றனர். மேலும் பண்டிகை நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் லட்சக்கணக்கானோர் வருகை புரிகின்றனர். புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்த சூழலில் தற்போது பண்டிகை காலம் என்பதால் ஏழுமலையானை ஏராளமான பக்தர்கள் தரிசித்து செல்கின்றனர்.
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திருமலை பிரசாதம் வழங்கும் லட்டு கவுண்டரில் திடீரென தீ விபத்து நேரிட்டது. லட்டு விநியோக வளாகத்தில் உள்ள 47ம் எண் கவுண்டரில் யு.பி.எஸ்.-ல் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. லட்டு விநியோக கவுண்டரில் இருந்து கரும்புகை வெளிவருவதை பார்த்த பக்தர்கள் அங்கிருந்து அலறிஅடித்து ஓட்டம் பிடித்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்து தேவஸ்தான மின்சார துறை அதிகாரிகள் மின்விநியோகத்தை நிறுத்தி, யு.பி.எஸ். இணைப்பை துண்டித்து தீ விபத்தை தடுத்து நிறுத்தினர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.