அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 19 காளைகளை அடக்கியவருக்கு கார் பரிசு
1 min read
Avaniyapuram Jallikattu: Car prize for the athlete who tamed 19 bulls
14/1/2025
பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. பொங்கல் பண்டிகையான இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்து வந்தது. இந்த சூழலில் மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி 11 சுற்றுகளுடன் நிறைவடைந்தது.
முன்னதாக இன்று காலை 6.30 மணிக்கு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியது. போட்டி தொடங்கியதில் இருந்தே, மாடு பிடி வீரர்கள், திமிறி வரும் காளைகளின் திமிலை பிடித்து அடக்கி வருகிறார்கள். ஒரு சில காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் சென்றது. ஒருசில காளைகள் வீரர்களை முட்டி தாக்கியது. இதில் காயமடைந்த வீரர்கள் உடனடியாக வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் மஞ்சள், இளஞ்சிவப்பு, நீல நிறம் அணிந்த வீரர்கள் சுற்றுக்கு தலா 50 பேர் வீதம் களம் கண்டனர். 10 சுற்றுகள் முடிந்த பிறகு, அனைத்து சுற்றுகளிலும் முன்னிலை வகித்த 30 பேர் வீர்ரகள் தேர்வு செய்யப்பட்டு, இறுதிச் சுற்றுப் போட்டியில் கலந்துகொண்டனர். இந்த இறுதிச் சுற்றின்போது மதுரை அவனியாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. மழையை பொருட்படுத்தாமல், வீரர்கள் காளைகளை அடக்கியதை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.
இந்நிலையில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 19 காளைகளை அடக்கி திருப்பரங்குன்றம் கார்த்திக் முதலிடம் பெற்றுள்ளார். 15 காளைகளை அடக்கி குன்னத்தூர் அரவிந்த் திவாகர் இரண்டாம் இடமும், 14 காளைகளை அடக்கி திப்புவனம் முரளிதரன் மூன்றாம் இடமும் பிடித்தனர்.
இந்த ஆண்டு தமிழக முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் சார்பில், பிடிபடாத சிறந்த காளையின் உரிமையாளருக்கு டிராக்டர் மற்றும் சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் பரிசு அளிக்கப்படுகிறது.
இதன்படி 19 காளைகளை அடக்கி முதல் பரிசான ரூ.8.50 லட்சம் மதிப்புள்ள நிசான் காரை திருப்பரங்குன்றம் கார்த்திக் பெற்றுக்கொண்டார். மேலும் கன்றுடன் கூடிய பசுவும் அவருக்கு வழங்கப்பட்டன. 15 காளைகளை அடக்கிய குன்னத்தூர் அரவிந்த் திவாகருக்கு இரண்டாம் பரிசான இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது.
இதேபோல பிடிபடாத சிறந்த காளையின் உரிமையாளருக்கு முதல் பரிசாக ரூ.10 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் பரிசு வழங்கப்பட்டது. இதன்படி சிறந்த காளைக்கான முதல் பரிசை வி.கே.சசிகலாவின் காளை வென்றது. காளை வளர்ப்பாளர் மலையாண்டி பரிசுகளை பெற்றுக் கொண்டார். மேலும் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த் சார்பில் பசுவும் கன்றும் பரிசாக அளிக்கப்பட்டது. முன்னதாக ஜல்லிகட்டில் சசிகலாவின் காளை பங்கேற்ற நிலையில், வீரர்கள் சூழந்து நின்றபோதும் கம்பீரமாக நின்று வேட்டையாடிய காளையை மாடுபிடி வீரர்கள் ஒருவரால் கூட பிடிக்கமுடியவில்லை.
ஜி.ஆர்.கார்த்திக் என்பவரது காளைக்கு இரண்டாவது பரிசாக இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், கலெக்டர் சங்கீதா ஆகியோர் வழங்கினர்.
இந்தப் போட்டியில், பங்கேற்ற மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், பார்வையாளர்கள், காவலர்கள் உட்பட 45 பேர் காளைகள் முட்டியதில் காயமடைந்தனர். இதில் 12 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மேலும், போட்டியின்போது காளை ஒன்று மார்பில் முட்டியதில், படுகாயமடைந்து ரத்தக் காயங்களுடன் மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நவீன் என்பவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.