நெல்லை:நகை கொள்ளை வழக்கில் மகன் கைதானதால் தாய் தற்கொலை
1 min read
Nellai: Mother commits suicide after son arrested in jewelry robbery case
15.1.2025
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கிய ரெமன். இவர் மூலைக்கரைப்பட்டி மெயின் பஜாரில் ஒரே கட்டிடத்தில் ஜவுளிக்கடை, பாத்திரக்கடை, நகை அடகுகடை நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ந்தேதி கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் கடையின் பின்பக்கத்தில் துளையிட்டு உள்ளே புகுந்து அடகுகடையில் இருந்த லாக்கரை உடைத்து அதில் இருந்த சுமார் 275 பவுன் தங்க நகைகள், ரூ.3 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச்சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் மூலைக்கரைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து 9 தனிப்படை அமைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடிவந்தனர். இந்த நிலையில் தனிப்படையினர் நடத்திய விசாரணையில் மூலைக்கரைப்பட்டி அடுத்த முனைஞ்சிப்பட்டி அருகே உள்ள ரெட்டார்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகநயினார் மகன் ராமகிருஷ்ணன் (40 வயது) என்பவர் இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படையினர் ரெட்டார்குளத்தில் உள்ள ராமகிருஷ்ணன் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அவர் அங்கு இல்லை. அவர் திருமணமாகி ஐதராபாத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தது தெரியவந்தது. தொடர்ந்து தனிப்படையினர் ஐதராபாத்துக்கு விரைந்து சென்று ராமகிருஷ்ணனை கைது செய்தனர். அவரிடமிருந்து 100 பவுன் நகைகளும், ரூ.11 லட்சம் ரொக்கப்பணமும் கைப்பற்றப்பட்டது. ராமகிருஷ்ணனை போலீசார் நெல்லைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே ராமகிருஷ்ணன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதை அறிந்த அவரது தாயார் மீனாட்சி (62 வயது) அதிர்ச்சி அடைந்தார். மேலும் போலீசார் மீனாட்சியிடமும் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த மீனாட்சி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.