மாணவியின் ஆபாச படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட வாலிபர் கைது
1 min read
Youth arrested for posting obscene image of student on social media
15.1.2025
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே உள்ள காரங்காடு புல்லுவிளை பகுதியை சேர்ந்தவர் ஷாஜின். இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது குடும்பத்தினர் தற்போது பேயன்குழியில் வசித்து வருகின்றனர். ஷாஜினுக்கு பக்கத்து ஊரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருடன் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதற்கிடையே கடந்த 2022-ம் ஆண்டு மாணவி பிளஸ்-1 படிக்கும் போது ஷாஜின் மாணவியிடம் பணம் கேட்டுள்ளார்.
அதற்கு மாணவி தனது கையில் கிடந்த தங்க மோதிரத்தை கழற்றி கொடுத்துள்ளார். அந்த மோதிரத்தை ஷாஜின் அடகு வைத்து பணம் பெற்றுள்ளார். பின்னர் பல மாதங்களுக்குபின் மோதிரத்தை அந்த மாணவி ஷாஜினிடம் கேட்டுள்ளார். அப்போது மோதிரம் வீட்டில் இருக்கிறது வா தருகிறேன் என்று கூறி வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து மாணவியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் மாணவியுடன் இருந்ததை ஷாஜின் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து வைத்து கொண்டார். தொடர்ந்து அந்த மாணவியிடம் அவர் எடுத்த ஆபாசபடத்தை காண்பித்து பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடைசியாக மாணவியிடம் ரூ.2 லட்சம் கேட்டுள்ளார். பணத்தை தரவில்லை என்றால் ஆபாச வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவேன் என கூறி மிரட்டியுள்ளார்.
இதற்கிடையே அந்த மாணவி ஆடை மாற்றும் படத்தை சமூக வலைதளத்தில் ஷாஜின் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த மாணவி அதிர்ச்சியடைந்து தனது பெற்றோரிடம் விஷயத்தை கூறியுள்ளார். இதையடுத்து மாணவியின் பெற்றோர் குளச்சல் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து ஷாஜினை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.