பா.ஜ.க. மாவட்ட தலைவர்கள் அறிவிப்பு தாமதம் ஆவது ஏன்?
1 min read
BJP District Leaders Announcement Why is there a delay?
16.1.2025
தமிழக பா.ஜ.க. புதிய மாவட்ட தலைவர்கள் தேர்வு செய்வதில் இழுபறி நிலவுவதால் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 3 பேர் வீதம் தேர்வு செய்து அவர்களிடம் நேர்முக தேர்வு நடத்தி தகுதியானவரை மாவட்ட தலைவராக தேர்வு செய்ய திட்டமிட்டு இருந்தனர்.
இந்த நிலையில் தேசிய கட்சியான பா.ஜ.க.வுக்குள்ளும் கோட்டா முறை புகுந்ததாக கூறப்படுகிறது. அதாவது மொத்தம் உள்ள 66 மாவட்டங்களில் மூத்த முன்னணி நிர்வாகிகள் 5 பேர் தங்கள் ஆதரவாளர்கள் தலா 5 பேருக்கு மாவட்ட தலைவர் பதவி பெற்றுள்ளதாகவும், 2 முன்னணி தலைவர்கள் தலா 10 மாவட்ட தலைவர்கள் பதவி பெற்றிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதேபோல் கோட்டா அளவிலும் சிலர் பதவிகளை பெற்றுள்ளார்கள்.
இதை தவிர்த்து 15 மாவட்ட தலைவர்கள் பதவிகள் மட்டுமே நேரடி நியமனம் மூலம் நியமிக்க திட்டமிட்டுள்ளார்கள். இதற்கிடையில் 5 மாவட்டங்களில் தலைவராக தேர்வு செய்யப்பட்டவர்களை எந்த அடிப்படையில் தேர்வு செய்தீர்கள் சென்று நிர்வாகிகள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
நேற்று நடைபெற்ற வீடியோ கான்பரன்சிங் பேச்சில் கடுமையான எதிர்ப்பு கிளப்பி இருக்கிறது. நேர்முகத் தேர்வு நடத்தாதது ஏன் என்று சிலர் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பாதியிலேயே அந்த கூட்டம் தடைபட்டது.
இதனால் நேற்று வெளியிட இருந்த மாவட்ட தலைவர்கள் பட்டியல் வெளியிடப்படவில்லை. இன்று அல்லது நாளைக்குள் முதல் கட்டமாக 30 மாவட்ட தலைவர்கள் பட்டியலை வெளியிட முயன்று வருகிறார்கள்.