June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

மதுரை-தூத்துக்குடி ரெயில் திட்ட நில எடுப்பில் எந்த சிக்கலும் இல்லை: அமைச்சர் விளக்கம்

1 min read

There is no problem in land acquisition for Madurai-Thoothukudi rail project: Minister Sivashankar

1612025
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் கடந்த 10-ந் தேதி அளித்த பேட்டியில், அருப்புக்கோட்டை வழியாக மதுரை-தூத்துக்குடி அகல ரெயில் பாதை அமைக்கும் திட்டத்தை கைவிட தமிழ்நாடு அரசு கோரியிருந்ததால், இந்த திட்டம் கைவிடப்பட்டதாக கூறியதாக செய்தி வெளியாகியிருந்தது. இதற்கு உடனடியாக 11-ந் தேதியன்று நான் விரிவான மறுப்பு அறிக்கை வெளியிட்டுள்ளேன்.
இந்த திட்டம் உள்ளிட்ட ஏனைய ரெயில்வே திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று 19.8.2024 நாளிட்ட கடிதம் மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய ரெயில்வே மந்திரியை கேட்டுக்கொண்டுள்ளார். இந்த திட்டத்தை கைவிடுவது குறித்து எந்தவிதமான கடிதமோ, வாய்மொழியாகவோ தமிழ்நாடு அரசால் ரெயில்வே துறைக்கு தெரிவிக்கப்படாத நிலையில் முதல்-அமைச்சரால் பெரிதும் வலியுறுத்தப்படும் இந்த திட்டத்திற்கு உரிய நிதியை ஒதுக்கி உடனடியாக திட்டத்தை நிறைவேற்றிட வேண்டும் என மத்திய ரெயில்வே மந்திரிக்கு கோரிக்கையும் விடுத்திருந்தேன்.
தெற்கு ரெயில்வே இன்று (அதாவது நேற்று) விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “10.1.2025 அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, செய்தியாளர்கள் மதுரை-தூத்துக்குடி அகல ரெயில் பாதை திட்டம் குறித்து கேட்டபோது, அங்கு நிலவிய இரைச்சலான சூழ்நிலையினாலும், தேசிய மற்றும் மாநில ஊடகங்களை சேர்ந்த பல ஊடகவியலாளர்கள் ஒரே நேரத்தில் இந்தியா முழுவதும் உள்ள ரெயில்வே பிரச்சினைகள் குறித்து பல கேள்விகளை கேட்டதால், மத்திய மந்திரி தனுஷ்கோடி பாதை திட்டம், நிலம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளால் கைவிடப்பட்டது குறித்து அளித்த பதிலை மதுரை-தூத்துக்குடி அகல ரெயில் பாதை திட்டத்துக்கான பதில் என தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், மதுரை-தூத்துக்குடி திட்டம் தொடர்பாக தமிழ்நாடு அரசுடன் நிலம் சம்பந்தமாக எந்த ஒரு பிரச்சினையும் இல்லை” என ரெயில்வே மந்திரி விளக்கம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை-தூத்துக்குடி அகல ரெயில் பாதை திட்டம் தென் தமிழகத்தின் வளர்ச்சிக்கு முக்கியமான திட்டமாகும். எனவே இந்த திட்டத்துக்கு தேவையான நில எடுப்பு பணிகளுக்கு தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. இதற்கான உரிய நிதி ஒதுக்கீடு செய்து, இந்த திட்டத்தினை விரைந்து நிறைவேற்ற மத்திய அரசை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.