July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

அமைச்சர் சேகர்பாபுவுக்கு அண்ணாமலை கண்டனம்

1 min read

Annamalai condemns Minister Sekarbabu

19.1.2025
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மதுரை வருகை தந்த பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, திருச்செந்தூரில் பேசுகையில் திருப்பதி சென்றால் ஒரு நாள் முழுவதும் காத்திருக்கிறார்கள். இங்கே சில மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய முடியாதா? என்று தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறையின் லட்சணம் இதிலிருந்தே தெரிகிறது.

பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு போகிறது. பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சவுகரியங்களை கோவில் வளாகத்தில் ஏற்படுத்த வேண்டும். 2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும் போது தமிழகத்தில் இந்து சமய அறநிலைத்துறை இருக்காது. தி.மு.க. ஆட்சி இன்னும் 15 அமாவாசைகள் தான் தாங்கும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஆனால் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி அறிவிக்கும் வரை எத்தனை அமாவாசை வரும் என்பதை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள். ஐந்து முறை ஆண்ட கட்சியான அ.தி.மு.க., அண்ணாமலை சொன்னதால்தான் கூட்டணி முறிவு ஏற்பட்டது என்று கூறுவதை நான் ஏற்க மாட்டேன். சிறுபான்மையின மக்களின் வாக்குகளை குறிவைத்து கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க. தனியாக நின்றது.

தி.மு.க. மீது பொதுமக்கள் கோபத்தில் உள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை வந்தால் மக்களின் கோபம் தெரியும். வரும் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் இந்த சமய அறநிலையத்துறையை அகற்றுவோம் என்ற எங்களது கருத்துக்கு எத்தனை கட்சிகள் ஆதரவு தெரிவிக்கும் என்று தெரியவில்லை.
தேசிய ஜனநாயக கூட்டணியுடன் கொள்கை ரீதியில் இணையும் கட்சியுடன் தேர்தலை சந்திக்க உள்ளோம். பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று பேசியிருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் ரூ.11 லட்சம் கோடி தமிழக அரசுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலின்போது 36 பக்க வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ திட்டத்திற்கு ரூ.ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சர்கள் கண், காதுகளை திறந்து வைத்து பார்க்க வேண்டும். பிப்ரவரி மாதம் மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதில் தமிழகத்திற்கு பெரிய அளவிலான திட்டங்களுக்கு நிதிகள் ஒதுக்கப்படும். ஆனால் வேண்டுமென்றே இவர்கள் ஆட்சியினுடைய லட்சணத்தை மறைப்பதற்காக தினமும் மத்திய அரசின் மீது குறை சொல்வதை மட்டுமே ஒரு முழு நேர வேலையாக தி.மு.க. செய்து வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலால் தமிழகத்தில் என்ன மாற்றம் நடந்து விடப்போகிறது. இடைத்தேர்தல், இடைத்தேர்தலுக்கு இடைத்தேர்தல், இப்போது ஒரு தேர்தல் என ஐந்து வருடத்தில் நான்கு முறை மக்கள் வாக்களித்தால் ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும். இடைத்தேர்தலில் வாக்கு சதவீதம் குறையும், தேர்தலால் மக்கள் வெறுப்பில் உள்ளனர்.

பிரதமர் தமிழகம் வரும் போது, முதலமைச்சர் போட்டி போட்டுக்கொண்டு சந்திக்கிறார். இந்த சந்திப்பு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அரசின் மீது இருக்கும் வெறுப்பை மறைப்பதற்காகவே கவர்னரை பகடைக்காயாக பயன்படுத்துகின்றனர். கவர்னர் குறித்து அவதூறாக தி.மு.க.வினர் போஸ்டர் ஒட்டி வருகிறார்கள்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் வேண்டும் என்று மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியே கூறியிருக்கிறார். பா.ஜ.க. நிர்வாகிகள் மீது போலீசார் வேண்டுமென்றே பொய் வழக்கு பதிவு செய்து வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.