யாழ்ப்பாண கலாச்சார மையத்துக்கு திருவள்ளுவர் பெயர் : கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு
1 min read
Jaffna Cultural Center named after Thiruvalluvar: Governor R.N. Ravi praises
19.1.2025
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015-ம் ஆண்டு இலங்கை சென்றார். அப்போது அங்குள்ள யாழ்ப்பாணம் நகரில் 11 மில்லியன் டாலர் மதிப்பில் கலாச்சார மையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். இந்த கலாச்சார மையத்தை 2023, பிப்ரவரி மாதம் அப்போதைய இலங்கை அதிபர் ரணில் விக்ரம சிங்கே, மத்திய மந்திரி எல்.முருகன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.
இதனிடையே இந்தியா, இலங்கை நல்லுறவை வலுப்படுத்தும் விதமாக இந்திய நிதியுதவியுடன் கட்டப்பட்ட யாழ்ப்பாண கலாச்சார மையத்துக்கு தற்போது திருவள்ளுவர் பண்பாட்டு மையம் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் யாழ்ப்பாணம் கலாச்சார மையத்தை “திருவள்ளுவர் கலாச்சார மையம்” என பெயர் மாற்றம் செய்ததற்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ்நாடு கவர்னர் மாளிகை தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
இந்திய உதவியுடன் கட்டப்பட்ட யாழ்ப்பாணத்தில் உள்ள புகழ்பெற்ற கலாச்சார மையத்தை “திருவள்ளுவர் கலாச்சார மையம்” என்று பெயரிடுவது, தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்துவதோடு, பிரதமர் நரேந்திர மோடியின், உலகில் பழமையான மொழி மற்றும் கலாச்சாரமான தமிழின் பெருமையைப் பரப்புவதற்கான தொடர்ச்சியான பணியில் மற்றொரு மைல்கல் ஆகும்.
இது இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஆயிரக்கணக்கான ஆண்டு பழமையான கலாச்சார மற்றும் நாகரிக தொடர்பையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.