வடமாநிலத்தவர் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க ஊக்குவிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
1 min read
Order to admit children from northern states to government schools
20.1.2025
தமிழ்நாட்டின் அரசுப் பள்ளிகளில் பயிலும் வட மாநிலத்தவர்கள் குழந்தைகளுக்கு தமிழ் மொழியை பயிற்றுவிக்கும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ளுதல் தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். மேலும் வடமாநிலத்தவர் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கு ஊக்குவிக்க வேண்டும், அவ்வாறு சேர்ந்து அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு உதவித்தொகை, பரிசுகள் மற்றும் இதர சலுகைகள் அளித்து உற்சாகப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
வடமாநிலத்தவர்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து தமிழ் மொழியை படிக்க வைப்பதாகவும் மாணவர்கள் விரும்பி படித்து நன்கு புலமை பெற்றுள்ளதாகவும் வடமாநிலத்தவர்கள் தங்களது குழந்தைகளுக்கு தமிழ்மொழியை பயிற்றுவிப்பதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தங்கள் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பணிபுரிந்து வாழும் வடமாநிலத்தவர் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதற்கு ஊக்குவிக்குமாறும் அவ்வாறு சேர்ந்து கல்வி பயிலும் மாணவர்கள் அரசு நடத்தும் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றால் உதவி தொகை பரிசுகள் மற்றும் இதர சலுகைகள் அளித்து உற்சாகப்படுத்துமாறும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் அனைத்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.