தோரணமலையில் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பூஜை
1 min read
Special puja for school students at Thoranamalai
20.1.2025
தென்காசி – கடையம் செல்லும் சாலையில் உள்ள தோரணமலை முருகன் கோவிலில் பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளி செல்லும் மாணவர்களுக்கான சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
தென்காசி-கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும். இக்கோவிலில் 60 ஆண்டு காலமாக கே.ஆதிநாராயணன்-சந்திரலீலா குடும்பத்தினர் இறைபணி மேற்கொண்டு வருகின்றனர். இங்கு ஆன்மீகம் மட்டுமின்றி பல்வேறு நலத்திட்ட பணிகளும், கல்விப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவில் வளாகத்தில் கே.ஆதிநாராயணன்-சந்திரலீலா நினைவு நூலகம் அமைந்துள்ளது. இங்கு ஏழை எளிய கிராமப்புற மாணவ மாணவிகள், போட்டித் தேர்வு , பொதுஅறிவு, பள்ளி பாட புத்தகங்கள், மருத்துவம், இலக்கிய புத்தகங்கள், தமிழ், ஆங்கிலம் தினசரி நாளிதழ்கள் உள்ளிட்ட மாணாக்கர்கள் பயன் பெரும் வகையில் சுமார் 4000 புத்தகங்கள் உள்ளன. இங்கு கோவிலுக்கு வருகை தரும் மாணவ, மாணவிகள் வந்திருந்து படித்து சென்று வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக் கான சிறப்பு பூஜை நேற்று (ஞாயிறு) நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, தாங்களே அங்குள்ள சரஸ்வதிக்கு பூக்களால் பூஜை செய்து வழிபட்டனர்.
முன்னதாக அங்குள்ள சப்த கன்னியர்களுக்கு சிறப்பு வழிபாடும், தல விருட்சமாக வளர்ந்து நிற்கும் வேம்பு மற்றும் அரச மரத்திற்கு சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். காலை, மற்றும் மதியம் வேளைகளில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஆ. செண்பகராமன் செய்திருந்தார்.