July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை சாத்தப்பட்டது

1 min read

The Makaravilakku Puja was completed and the Sabarimala Ayyappa temple was closed.

20/1/2025
சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள்.
இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி தொடங்கி டிசம்பர் 26-ந்தேதி வரை நடைபெற்றது. இதையடுத்து மகரவிளக்கு பூஜைக்காக கடந்தமாதம் (டிசம்பர்) 30-ந்தேதி கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது.
கோவில் நடை திறக்கப் பட்டதில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சென்றார்கள். இதனால் மகரவிளக்கு பூஜை காலத்தில் சபரி மலையில் தினமும் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத வகையில் இருந்தது. பக்தர்கள் நெரிசல் சிக்காமல் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன.
மகரவிளக்கு பூஜையின் சிகர நிகழ்ச்சியான மகர ஜோதி தரிசனம் கடந்த 14-ந்தேதி நடைபெற்றது. லட்சக் கணக்கான பக்தர்கள் ஜோதி தரிசனம் செய்தார்கள்.
இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான மகர விளக்கு பூஜை பந்தளம் அரண்டனை ராஜ பிரதிநிதி சாமி தரிசனத்துக்கு பிறகு இன்று நிறைவுக்கு வந்தது.

இன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின்பு கோவில் தந்திரிகள் கண்ட ரரு ராஜீவரு, பிரம்மதத்தன் ஆகியோர் தலைமையில் கணபதிஹோமம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக அபிஷேகம் மற்றும் நைவேத்திய பூஜைகள் நடந்தன.

மகர விளக்கு வைப வத்தை முன்னிட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த திருவாபரணங்கள் பந்தள அரண் மனையிடமிருந்து கொண்டு வந்த திருவாபரண குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை அவர்கள் எடுத்துக் கொண்டு பதினெட்டாம்படி வழியாக இறங்கிச் சென்று பந்தளம் அரண்மனைக்கு புறப்பட்டனர்.
அதே நேரத்தில் பந்தளம் அரண்மனை ராஜ பிரதிநிதி திருக்கேத்தநாள் ராஜராஜ வர்மா ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி, ஐயப்பன் சிலைக்கு விபூதியாபிஷேகம் செய்தார்.

பின்னர் ஐயப்பனின் கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிவித்தல், கையில் யோக தடி வைத்து யோக நிலையில் அமர்த்தும் நிகழ்வு நடைபெற்றது.
பின்பு ஹரிவராசனம் பாடப்பட்டு கோவில் நடை சாத்தப்பட்டது. கோவில் சாவியை பந்தள அரச பிரதி நிதியிடம் மேல்சாந்தி ஒப்படைத்தார். அதனை கையில் வைத்துக்கொண்டு அரச பிரதிநிதி பதினெட்டாம் படி வழியாக இறங்கிச் சென்றார்.
பதினெட்டாம் படி இயங்கியதும் கோவில் சாவியை தேவசம் பிரதி நிதிகள் மற்றும் மேல்சாந்தி முன்னிலையில் சபரிமலை நிர்வாக அதிகாரி பிஜூ நாத்திடம் ஒப்படைத்தார். அப்போது மாதாந்திர பூஜை செலவுக்கான பணமும் வழங்கப்பட்டது.

பின்னர் அரச பிரதிநிதி மற்றும் அவரது குழுவினர் பந்தளம் அரண்மனைக்கு புறப்பட்டனர். திருவாபரண ஊர்வலம் வருகிற 23-ந்தேதி பந்தளம் அரண்மனையை சென்றடைகிறது.

இந்த ஆண்டு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை சீசன் காலத்தில் கடந்த ஆண்டை விட அதிகமான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தனர். இந்த இரு சீசன்களிலும் மொத்தம் 53லட்சம் பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.