இரட்டை இலை வழக்கு: மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி
1 min read
Two Leaves Case: Supreme Court dismisses appeal
20.1.2025
இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று சூர்யமூர்த்தி என்பவர், தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு வழங்கிய உத்தரவின் படி, இந்திய தேர்தல் ஆணையம் தொடர் விசாரணை நடத்தி வந்தது. இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், மனுதாரர், கே.சி.பழனிசாமி, புகழேந்தி ஆகிய அனைத்து தரப்பினரும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. எடப்பாடி பழனிசாமி அண்மையில் சென்னை ஐகோர்ட்டில் ஒரு கூடுதல் மனுவை தாக்கல் செய்தார். அதிமுக மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ள சூர்யமூர்த்தி என்பவர் அதிமுகவில் உறுப்பினர் கிடையாது எனத் தெரிவித்தார். அதிமுகவில் உறுப்பினர் இல்லாத ஒருவர், கட்சி மற்றும் சின்னம் தொடர்பாக வழக்கை தொடர எந்தவித முகாந்திரம் இல்லை. கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லாத ஒருவர், கட்சியின் உள் விவகாரங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்க முடியாது. சூர்யமூர்த்தியின் மனுவை தேர்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும் என்று கோரினார்.
இதையடுத்து, இந்த வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. சென்னை ஐகோர்ட்டு விதித்த தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் எம்.ஜி.ராமச்சந்திரன் என்பவர் மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இரட்டை இலை சின்னம் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி உத்தரவிட்டனர். சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்தவர் மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவித்ததால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே, இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்ற தடை தொடர்கிறது.