July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

பரந்தூர் விவசாயிகள் மத்தியில் விஜய் பரபரப்பு பேச்சு: “வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல”

1 min read

Vijay’s sensational speech among Paranthur farmers: “I am not against development”

20.1.2025
காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் ஏகனாபுரம் பகுதியில் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 900 நாட்களுக்கும் மேலாக ஏகானாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், தனது கட்சியின் முதல் மாநாட்டில் பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, விவசாய நிலங்களை கையகப்படுத்த கூடாது என தீர்மானமும் நிறைவேற்றி இருந்தார்.
இந்த நிலையில் பரந்தூர் கிராம மக்களை சந்திக்க விஜய் முடிவு செய்தநிலையில், அதற்காக, தமிழக டி.ஜி.பி. மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் அனுமதி கோரப்பட்டது.
அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து த.வெ.க. தலைவர் விஜய் இன்று பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மக்களை ஏகானாபுரத்தில் இன்று சந்தித்தார். முன்னதாக இதற்கான ஏற்பாடுகளை அக்கட்சியினர் தீவிரமாக செயல்படுத்தி வந்த நிலையில், அப்பகுதியில் சோதனை சாவடிகளில் அமைத்து போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் போராட்டகாரர்களுடனான சந்திப்பு நடைபெறும் இடத்திற்கு பிரசார வாகனத்தில் விஜய் வருகை தந்தார். அவர் வரும் வாகனத்தை தொண்டர்கள் சூழ்ந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அதற்கேற்ப விஜய் தனது கட்சி கொடியை ஏந்தியபடி தொண்டர்களை பார்த்து கையசைத்து மண்டப வளாகத்திற்குள் நுழைந்தார்.
இதனைத்தொடர்ந்து அங்கு அவர் பேசியதாவது:-
“கிட்டத்தட்ட 910 நாட்களுக்கு மேல் உங்கள் மண்ணுக்காக போராடுகிறீர்கள். உங்கள் போராட்டத்தை பற்றி ஒரு சிறுவன் பேசியது எனது மனதை ஏதோ பண்ணியது. உடனே உங்களை எல்லாம் பார்க்கணும் தோணுச்சு. உங்க கூட பேசிய ஆகணும்னு தோணுச்சு. உங்க எல்லார் கூடயும் நிற்பேன், தொடர்ந்து நிற்பேன் என உங்ககிட்ட சொல்லணும் தோணுச்சு. ஒவ்வொரு வீட்டுக்கும் அவர்கள் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் தான். அதேபோல் நமது நாட்டுக்கு முக்கியமானவர்கள் விவசாயிகள்.
அந்த விவசாயிகளின் காலடி மண்ணை தொட்டு கும்பிட்டு எனது பயணத்தை தொடங்க வேண்டும் என்று முடிவோடு தான் இருந்தேன். அதற்கு சரியான இடம் இதுதான் என எனக்கு தோன்றியது.
உங்கள் வீட்டில் உள்ள ஒரு மகனாக என்னோட கள அரசியல் பயணம், உங்களின் ஆசிர்வாதத்தோடு இங்கிருந்து தான் தொடங்குகிறது. தவெக மாநாட்டில் கொள்கையை அறிவித்தோம். இதனை இங்கே சொல்ல காரணம் ஓட்டு அரசியலுக்காக அல்ல. இந்த பிரச்சினையில் நான் உங்களோடு உறுதியாக நிற்பேன். மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். வளர்ச்சிக்கு எதிரானவன் நான் அல்ல. ஏர்போர்ட் வர வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. இந்த இடத்தில் வர வேண்டாம் என்று தான் சொல்கிறேன். இதனை நான் சொல்லவில்லை என்றால் என்னை வளர்ச்சிக்கு எதிரானவன் போல பேசுவார்கள்.
சென்னை வெள்ளத்துக்கு காரணம், சுற்றுவட்டார பகுதியில் உள்ள நீர் நிலைகளை அழித்தது தான் என ஆய்வுகள் சொல்கின்றன. இப்படி ஒரு சூழல் இருக்கும்போது 90 சதவீத நீர் நிலைகளை அழித்து பரந்தூர் விமான நிலையத்தை கொண்டுவர வேண்டும் என்கிற முடிவை எந்த அரசு கொண்டுவந்தாலும், அது மக்கள் விரோத அரசாக தான் இருக்க முடியும். டங்க்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக தமிழக அரசு கொண்டுவந்த தீர்மானத்தை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். ஆனால், அதே நிலைப்பாட்டை தானே பரந்தூர் பிரச்சினையிலும் எடுத்திருக்க வேண்டும்.
அரிட்டாபட்டி மக்கள் எப்படியோ, அப்படி தானே பரந்தூர் மக்களும். அப்படி தானே அரசாங்கம் யோசிக்க வேண்டும். ஆனால் அரசு அப்படி செய்யவில்லை. ஏன் செய்யவில்லை. ஏனென்றால், விமான நிலையத்தையும் தாண்டி இந்த திட்டத்தில் அவர்களுக்கு ஏதோ ஒரு லாபம் இருக்கிறது. அது மக்கள் தெளிவாக புரிந்து வைத்துள்ளார்கள்.
ஆட்சியாளர்களுக்கு ஒரு சில கேள்விகள்… நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது 8 வழிச்சாலையை எதிர்த்தீர்கள். அதே நிலைப்பாட்டை தானே இங்கே எடுத்திருக்க வேண்டும். எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவு, ஆளுங்கட்சியாக இருக்கும் போது விவசாயிகளுக்கு எதிர்ப்பா.. எனக்கு புரியவில்லையே. இனிமேலும் உங்கள் நாடகத்தை பார்த்து மக்கள் சும்மா இருக்கமாட்டார்கள். நீங்கள் உங்களின் வசதிக்காக அவர்களோடு நிற்பதும், நிற்காமல் இருப்பதும் நாடகம் ஆடுவதும், நாடகம் ஆடாமல் இருப்பதையும் நிறுத்த வேண்டும். நம்புகிற மாதிரி நாடகம் ஆடுவதில் தான் நீங்கள் கில்லாடி.
விமான நிலையத்துக்காக ஆய்வு செய்த இடத்தை மறுஆய்வு செய்ய வேண்டும் என ஒன்றிய, மாநில அரசுக்கு வலியுறுத்துகிறேன். விவசாய நிலங்கள் இல்லாத பாதிப்புகள் குறைவாக இருக்கிற இடமாக பார்த்து விமான நிலையத்தை கொண்டுவாருங்கள். வளர்ச்சி தான் மக்களின் முன்னேற்றம். வளர்ச்சியின் பெயரால் நடக்கும் அழிவு மக்களை மிக அதிகமாக பாதிக்கும். மக்கள் உங்கள் தெய்வங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை இழக்காதீர்கள். உங்களுக்காகவும், உங்கள் ஊருக்காகவும் இனி உங்க வீட்டு பிள்ளையான நானும், த.வெ.க. தொண்டர்களும் சட்டத்துக்கு உட்பட்டு எல்லா வழிகளிலும் உங்களோடு உறுதியாக நிற்பேன்.

ஏகனாபுரம் அம்பேத்கர் திடலில் உங்களை சந்திப்பது தான் எனது திட்டம். ஆனால், என்னை அனுமதிக்கவில்லை. நான் ஏன் ஊருக்குள் வர தடை விதிக்கப்பட்டது என்று தெரியவில்லை. இதேபோல் சில நாட்களுக்கு முன், துண்டு சீட்டு கொடுத்ததற்கு தடை விதித்தார்கள். அதுவும் ஏன் எனத் தெரியவில்லை. நம்பிக்கையுடன் இருங்கள். வெற்றி நிச்சயம்.. நன்றி .. வணக்கம்”
இவ்வாற விஜய் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.