அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சென்னை ஐகோர்ட்டு நோட்டீஸ்
1 min read
Chennai High Court notice to former AIADMK minister Rajendra Balaji
21.1.2025
கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி மற்றும் அதிமுக முன்னாள் நிர்வாகியான விஜய நல்லதம்பி ஆகியோர் ஆவின் உள்ளிட்ட அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, விஜய நல்லதம்பி ஆகியோருக்கு எதிராக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
கடந்த 2021-ம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரி நல்லதம்பி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், வேலைக்காக பணம் கொடுத்தவர்களை அழைத்து, 70 லட்சம் வரை திருப்பிக் கொடுத்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வாக்கு மூலத்தை மாற்றிச் சொல்ல வேண்டும் என மிரட்டல் விடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது. பணத்தை திருப்பிக் கொடுத்தது, சாட்சிகளை மிரட்டியது தொடர்பாக ஆதாரங்களுடன், மாவட்ட குற்றப்பிரிவுக்கு புகார் அளித்ததாகவும், அதில் மேல் விசாரணை நடத்த கேட்டுக் கொண்டதாகவும் நல்லதம்பி தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி வேல்முருகன், மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 4 வாரங்களில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியதுடன், விசாரணையை தள்ளிவைத்தார்.