July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

அதிபராக டிரம்ப் பதவிஏற்றபின் முதல் அறிவிப்பு

1 min read

First announcement after Trump’s inauguration as president

21/1/2025
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் பதவியேற்றுள்ளார்.
அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் முன்னாள் துணை அதிபருமான இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை பெற முடியாமல் ஏமாற்றமடைந்தார்.
இந்நிலையில், 47வது அதிபராக டிரம்ப் நேற்று முன்தினம் பதவி ஏற்றார். அதன்படி, கேப்பிடல் எனப்படும் பாராளுமன்ற கட்டடத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது.
இதற்காக, டிரம்ப் அமெரிக்க தலைநகரான வாஷிங்டன் டி.சி.க்கு நேற்று சென்றார். பிறகு, புளோரிடாவின் பாம் பீச்சிலிருந்து வாஷிங்டனுக்கு தனி விமானம் மூலம் தனது மனைவி, மகனுடன் புறப்பட்டுச் சென்றார்.

அதிபர் டிரம்ப் பதவியேற்பு விழாவில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தொழிலதிபர் அம்பான் மற்றும் அவரது மனைவி நீட்டா அம்பானி உள்பட உலக தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் கலந்துக் கொண்டனர்.
இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபர் பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப் முதல் நாளிலேயே ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி அமெரிக்கா பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறும் என்று அறிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவில் இனி ஆண் மற்றும் பெண் என இரண்டு பாலினங்கள் மட்டும் அங்கீகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அதிபர் டிரம்ப் பதவியேற்ற முதல் நாளில் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறி இருப்பவர்கள் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள். சட்டவிரோத குடியேற்றத்தை முற்றிலுமாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

வீட்டில் இருந்து பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள் உடனே அலுவலகத்திற்கு திரும்ப வேண்டும். வாரத்திற்கு ஐந்து நாட்கள் அவர்கள் கட்டாயம் அலுவலகம் வந்து பணியாற்ற வேண்டும். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.

அமெரிக்காவில் போதை பொருள் கலாச்சாரம் ஒழிக்கப்படும். போதை பொருட்களை விற்பனை செய்வோர் பயங்கரவாதிகளாக வகைப்படுத்தப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பனாமா கால்வாய் கட்டுப்பாட்டை மீட்டெடுக்க தனி திட்டம் உருவாக்கப்படும். விரைவில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படும். மெக்சிகோ வளைகுடா அமெரிக்கா வளைகுடா என்று பெயர் மாற்றப்படும். பிறப்புரிமைக் குடியுரிமையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு தனி திட்டம் வகுக்கப்படும்.

ஏற்கனவே அறிவித்ததை போல் பாலின வேறுபாடு முடிவுக்கு கொண்டுவரப்படும். அமெரிக்க அரசு ஆண் மற்றும் பெண் என்ற இரு பாலினங்களை மட்டும் தான் அங்கீகரிக்கும். இது அரசின் அதிகாரப்பூர்வ கொள்கை முடிவு.

சீனா, கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து வரும் இறக்குமதிக்கு புதிய வரிகள் விதிக்கப்படும். கனடா மற்றும் மெக்சிகோ தயாரிப்புகள் மீது 25 சதவீதம் வரி விதிக்கப்படும். சீன பொருட்களுக்கான வரி குறித்து எந்த தகவலும் தற்போது வெளியிடப்படவில்லை. இந்த நடவடிக்கை பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும்.

மற்ற நாடுகளில் வரி விதித்து வர்த்தக அமைப்பில் சில சீர்திருத்தங்களை மேற்கொள்ப்படும். அமெரிக்க மக்களின் நலன் கருதி நிதி மற்றும் வரி சார்ந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதன் மூலம் அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.

அரசு கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்படும். அமெரிக்க மக்களுக்கு மீண்டும் பேச்சு சுதந்திரம் கொண்டு வரப்படும். அனைத்து மக்களும் மின்சார வாகனம் (EV) தான் வாங்கியாக வேண்டும் என்ற கட்டுப்பாடு நீக்கப்படும். மக்கள் தங்களுக்கு விருப்பமான வாகனங்களை வாங்கி கொள்ளலாம்.

எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் அமெரிக்கா தன்னிறைவு அடைய நவடிக்கை எடுக்கப்படும். இதற்காக எரிசக்தி செலவை குறைத்தல், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை குறைக்க தேசிய எரிசக்தி அவசரநிலை கொண்டுவரப்படும்.

உள்நாட்டு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் போது, மக்களுக்கு குறைந்த விலையில் அவற்றை வழங்க முடியும். இது அமெரிக்காவிற்கும் பலன் தரும்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.