July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

யு.ஜி.சி. விதிமுறைகளுக்கு எதிராக கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

1 min read

Resolution passed in Kerala Assembly against UGC regulations

21.1.2025
தமிழக சட்டமன்றத்தில் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு (யு.ஜி.சி.) சமீபத்தில் வெளியிட்ட வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியதை போன்று, 9 மாநில சட்டமன்றங்களிலும் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டுமென கோரி அம்மாநில முதல்-மந்திரிகளுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜன.20) கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில் மத்திய அரசின் பல்கலைக் கழக மானிய குழுவின் ( யு.ஜி.சி.) புதிய விதிகளை திரும்பப் பெற வலியுறுத்தி கேரள மாநில சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முன்னதாக யு.ஜி.சி. விதிகளை திரும்பப் பெற கோரி இந்தியா கூட்டணி ஆளும் மாநிலங்களின் சட்டசபைகளில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதி இருந்த அந்த கடிதத்தில் கூறியிருந்ததாவது:-
தமிழக சட்டமன்றத்தில் கடந்த ஜன.9-ம் தேதி அன்று பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது தொடர்பாக பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வெளியிட்ட வரைவு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டுமென்றும், இளங்கலை, முதுகலைப் பட்டப் படிப்புகளில் கற்கை முறைகளுக்கான குறைந்தபட்ச வரைவு நெறிமுறைகள்-2024 மற்றும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆசிரியர்கள், கல்விப் பணியாளர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வு குறித்து வெளியிட்ட வரைவு நெறிமுறைகள்-2025 ஆகிய இரண்டு வரைவு நெறிமுறைகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென்றும் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானம் போன்று டெல்லி, இமாச்சல் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் மற்றும் தெலுங்கானா சட்டமன்றங்களிலும் நிறைவேற்றி மத்திய அரசை வலியுறுத்திட வேண்டும். பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுகளின் பங்கைக் கட்டுப்படுத்தும் வகையிலும், பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வுகளை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட நிர்வாக நடைமுறைகளைக் கட்டுப்படுத்தும் வகையிலும் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகள் குறித்து மாநில முதல்-மந்திரிகளின் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்.
பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் இந்த வரைவு நெறிமுறைகளை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்தி ஏற்கெனவே தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைத்து மாநிலங்களும் இதேபோன்ற நிலைப்பாட்டை எடுப்பது அவசியம் என தான் உறுதியாக நம்புகிறேன். தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய இந்தத் தீர்மானத்தைப் போன்று தங்களது மாநில சட்டமன்றங்களிலும் இதுதொடர்பாக தீர்மானத்தை நிறைவேற்றிட வேண்டும் என்று டெல்லி, இமாச்சல் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்காளம் மற்றும் தெலுங்கானா முதல்-மந்திரிகளை கேட்டுக் கொள்கிறேன்.

பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் மாநில அரசுகளின் உரிமைகளைத் தெளிவாக மீறும் செயல். இது நமது பல்கலைக்கழகங்களின் சுயாட்சியில் நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும். அதிகாரத்தை மையப்படுத்தி, நமது நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்துக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் மத்திய அரசின் இந்த முயற்சிகளுக்கு எதிராக நாம் ஒற்றுமையாக நிற்பது மிகவும் முக்கியம். எனவே, தனது இந்தக் கோரிக்கையை மேற்குறிப்பிட்ட மாநில முதல்-மந்திரிகளும் பரிசீலித்து, தங்களது மாநில சட்டமன்றங்களில் இதற்கான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்

இவ்வாறு அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.