கர்நாடகாவில் காய்கறி லாரி கவிழ்ந்ததில் 10 பேர் பலி
1 min read
10 killed as vegetable truck overturns in Karnataka
22.1.2025
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் குமுதா என்ற பகுதியிலல் கோவில் திருவிழா நடந்தது. இதற்காக சவனூரில் இருந்து 25க்கும் மேற்பட்டோர் காய்கறிகளை லாரியில் ஏற்றி கொண்டு உத்தர கன்னடம் மாவட்டத்தின் கும்தா பகுதியில் உள்ள சந்தை நோக்கி இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தனர்.
அந்த லாரி அர்பைல் காட் என்ற பகுதியில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 10 காய்கறி வியாபாரிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் 15 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் உயிரிழந்தவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் நிவாரணம் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-
கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற விபத்தில் 10 பேர் பலியான சம்பவம் மிகுந்த கவலை அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உள்ளூர் அரசு அதிகாரிகள் பாதிப்படைந்தவர்களுக்கு உதவிபுரிந்து வருகிறார்கள்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு PMNRF-ல் இருந்து 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை உதவிக்காக 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் இன்னொரு விபத்தும் நிகழ்ந்துள்ளது. ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள மந்திராலய சமஸ்கிருத பாடசாலை மாணவர்களை ஏற்றிக் கொண்டு நரஹரி கோவிலில் பிரார்த்தனை செய்வதற்காக ஹம்பிக்கு ஒரு வாகனம் சென்று கொண்டிருந்தது. அந்த வாகானம் சிந்தனூரில் உள்ள அரகினாமாரா முகாம் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
இந்த கோர விபத்தில் 3 மாணவர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர்.