July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

பரந்தூருக்கு பதில் திருப்போரூரில் விமான நிலையம் அமைக்க அன்புமணி அறிவுறுத்தல்

1 min read

Anbumani instructs to set up an airport in Thiruporur instead of Paranthur

22.1.2025
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னைக்கான இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்காக பரந்தூர், தி.மு.க. அரசு பொறுப்பேற்பதற்கு முன்பே அதாவது 2020ம் ஆண்டிலேயே முந்தைய ஆட்சியினால் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதாக தமிழக அரசு விளக்கம் அளித்திருக்கிறது.
இரு ஆண்டுகளுக்கு முன் விமான நிலையம் அமைப்பதற்காக பரந்தூர் தேர்வு செய்யப்பட்டதை சாதனையாக கொண்டாடிய தி.மு.க. அரசு, இப்போது மக்களிடம் எதிர்ப்பு அதிகரித்ததால் பழியை முந்தைய அரசு மீது போட முயல்வது கண்டிக்கத்தக்கது. இது அப்பட்டமான இரட்டை வேடமாகும். பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில், அது குறித்து விளக்கம் அளிக்கும் வகையில், செய்திக் குறிப்பு எண் எதையும் குறிப்பிடாமல் தமிழக அரசு வெளியிட்டுள்ள மொட்டை செய்திக் குறிப்பில், “இந்த, அரசு பொறுப்பேற்றதற்கு முன்பாகவே, அதாவது 2020-ம்ஆண்டிலேயே முந்தைய ஆட்சியினால் பரந்தூர் விமான நிலைய இடம் தேர்வு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது” என்று ஓர் இடத்திலும். “விமானப் போக்குவரத்து ஆணையத்தினால் சென்னை மாநகரின் இரண்டாவது விமான நிலையத்தை அமைத்திட பரந்தூர் பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது” என்று இன்னொரு இடத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது பரந்தூர் பகுதி மக்களின் கோபத்தை தணிப்பதற்காக தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்படும் அப்பட்டமான பொய் ஆகும்.
கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி முதல்-அமைச்சர் மு.கஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “சென்னையில் புதிய விமான நிலையம் அமைக்க தகுதியான இடத்தை தேர்வு செய்யும் பணியை டிட்கோ மூலம் தமிழக அரசு மேற்கொண்டது. புதிய விமான நிலையம் அமைக்க 4 பொருத்தமான இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. அவற்றில் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ஆய்வு செய்து பரிந்துரைந்த இரு இடங்களில் ஒன்றான பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று பரந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டதை சாதனையாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்திருந்தார்.
பரந்தூரில் அமையவிருக்கும் புதிய விமான நிலையத்தை செயல்படுத்தி முடிப்பது தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்கான பயணத்தில் முக்கியமான மைல்கல் என்றும் அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். ஆனால், இப்போது பரந்தூர் தேர்வு செய்யப்பட்டதற்கு முந்தைய அ.தி.மு.க. அரசும், மத்திய அரசும் தான் காரணம் என்று குறிப்பிடுகிறார்.
ஒரு திட்டத்தால் நல்ல பெயர் கிடைக்கும் என்றால் அதை தமது சாதனையாக காட்டிக் கொள்வதும், மக்களின் எதிர்ப்பு கிளம்பும் என்றால் அதன் பழியை அடுத்தவர்கள் மீது போடுவதும் தி.மு.க.வின் வழக்கமாகும். வன்னியர்கள் இட ஒதுக்கீடு, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட சமூகநீதி சார்ந்த விவகாரங்களில் தொடர்ந்து பொய்பேசி வரும் முதல்-அமைச்சர், பரந்தூர் விமான நிலைய விவகாரத்திலும் அப்பட்டமாசு பொய் பேசியுள்ளார்.

சென்னையில் இப்போது செயல்பட்டு வரும் விமான நிலையம் அடுத்த 6 முதல் 8 ஆண்டுகளில் அதன் முழு கையாளும் திறனை அடைந்து விடும் என்பதால் பசுமை விமானநிலையத்தை அமைக்க வேண்டும் என்பதில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாட்டாளி மக்கள் கட்சி உறுதியாக இருந்து வருகிறது. அதேநேரத்தில் புதிய விமான நிலையம் விளைநிலங்களில் அமைக்கப்படக் கூடாது தரிசு நிலங்களில் நான் அமைக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது.

சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற யோசனை எழுந்த போதே திருப்போரூர் பகுதியில் அரசுக்குச் சொந்தமான தரிசு நிலம் 5 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலாக இருக்கிறது என்றும், அங்கு விமான நிலையம் அமைக்கப்பட்டால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்தது.

தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு புதிய விமான நிலையம் அமைப்பதற்காக மாநில அரசால் திருப்போரூர், பட்டாளம், பரந்தூர், பன்னூர் ஆகிய 4 இடங்கள் தான் பரிந்துரைக்கப்பட்டன. தி.மு.க. அரசு நினைத்திருந்தால் திருப்போரூரில் விமான நிலையத்தை அமைக்க முடிவு செய்திருக்கலாம். ஆனால், பரந்தூர் தேர்வு செய்தது தி.மு.க. அரசு தான்.

புதிய விமான நிலையம் அமைக்க பரந்தூர் தேர்வு செய்யப்பட்ட பிறகும் கூட, 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய நான், புதிய விமான நிலையத்தை திருப்போரூரில் அமைப்பதுதான் யாருக்கும் பாதிப்பு இல்லாததாக இருக்கும் என்று கூறியிருந்தேன். பா.ம.க.வின் இந்த யோசனை தமிழக அரசுக்கும் தெரிவிக்கப்பட்டது.

அதன் பின், கடந்த மாதம் 21-ம் தேதி திருவண்ணாமாலையில் நடைபெற்ற தமிழ்நாடு உழவர் பேரிழக்கத்தின் மாநாட்டிலும் இதே கருத்தை நான் வலியுறுத்தி இருந்தேன். ஆனால், தி.மு.க. அரசு தான் ஏதோ சில காரணங்களுக்காக பரந்தூரில் தான் புதிய விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.

திருப்போரூரில் புதிய விமான நிலையத்தை ஏன் அமைக்கக்கூடாது? என்ற வினா எழுந்த போது, அதற்கு அருகில் கல்பாக்கம் அணுமின்நிலையமும், தாம்பரத்தில் விமானப்படைத் தளமும் இருப்பது தான் காரணமாகக் கூறப்பட்டது. அதன்படி பார்த்தால் இப்போது விமான நிலையம் அமைக்கப்பட உள்ள பரந்தூருக்கு அருகில் கடற்படைத் தளம் உள்ளது. அங்கும் விமானங்கள் வந்து செல்லும். மும்பை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் புதிய விமான நிலையங்களுக்கு அருகில் பழைய விமான நிலையங்களும் செயல்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன.

அறிவியலும், தொழில்நுட்பமும் வந்து விட்ட இந்த காலத்தில் மனம் இருந்தால் திருப்போரூரில் பசுமை விமான நிலையத்தை அமைத்து வெற்றிகரமாக செயல்படுத்த முடியும். இப்போதும் கூட காலம் கடந்துவிடவில்லை. திருப்போரூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டால், அதையும் இப்போதுள்ள விமான நிலையத்தையும் மெட்ரோ ரெயில் மூலம் எளிதாக இணைக்க முடியும். இரு விமான நிலையங்களுக்கு இடையிலான தொலைவும் மிகக் குறைவாக இருக்கும். இதை உணர்ந்து, சென்னைக்கான புதிய விமான நிலையத்தை திருப்போரூரில் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.