சீமான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க ஐகோர்ட்டு மறுப்பு
1 min read
High Court refuses to exempt Seeman from appearing in person
22.1.2025
கடந்த 2019ம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரையின்போது, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகிகள் கொடுத்த புகாரின் பேரில் கஞ்சனூரில் போலீசார் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக சீமான் மீது வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து இந்த வழக்கு விக்கிரவாண்டி கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் சீமானுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
இந்த சூழலில் பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி சீமான் தரப்பில் விக்கிரவாண்டி கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதனைத்தொடர்ந்து பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி சீமான் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றது.
அப்போது சீமானின் பேச்சு வன்முறையை தூண்டியது என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என சீமான் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும் இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாததால் சீமானுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் பிடிவாரண்டை ரத்து செய்வது குறித்து சீமான் தரப்பு மீண்டும் விக்கிரவாண்டி கோர்ட்டை நாடலாம் என தெரிவித்த சென்னை ஐகோர்ட்டு, இந்த வழக்கில் சீமான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்றும் கூறியது. மேலும் சீமானின் மனுவுக்கு பதிலளிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (பிப்ரவரி) 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை ஐகோர்ட்டு.