வடலூரில் சர்வதேச ஆய்வு மையம் கட்ட சுப்ரீம் கோர்ட்டு தடை – அண்ணாமலை வரவேற்பு
1 min read
Supreme Court bans construction of international research center in Vadalur – Annamalai welcomes
22.1.2025
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,
வடலூர் வள்ளலார் சத்தியஞான சபைப் பெருவெளியில், சர்வதேச ஆய்வு மையக் கட்டிடங்கள் கட்டத் தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு ஆணையிட்டுள்ளதை, பாஜக சார்பாக வரவேற்கிறோம்.
கடந்த ஆண்டு, வடலூர் சத்திய ஞானசபைப் பெருவெளியில் சர்வதேச மையம் கட்ட, திமுக அரசு முயற்சிகள் மேற்கொண்டது. இது, வள்ளலாரின் பெருவெளி மெய்யியலுக்கு எதிரான செயல் என்று வள்ளலார் பக்தர்கள், பாஜக உள்ளிட்ட பல அமைப்புகள், கண்டனங்கள் தெரிவித்ததோடு போராட்டங்களையும் முன்னெடுத்தனர்.
சென்னை ஐகோர்ட்டில் பாஜக ஆன்மிக மற்றும் ஆலய மேம்பாட்டுப் பிரிவைச் சேர்ந்த சகோதரர் வினோத் ராகவேந்திரா தொடர்ந்த வழக்கில், சர்வதேச மையக் கட்டிடங்கள் கட்ட, சென்னை ஐகோர்ட்டு இடைக்காலத் தடை விதித்தது. இந்தத் தடை நிலுவையில் இருக்கும்போதே, சத்திய ஞானசபைக்குச் சற்றுத் தள்ளி உள்ள பகுதியில், சர்வதேச மையக் கட்டிடங்கள் கட்டத் தொடங்கியது தமிழ்நாடு அரசு.
இந்த அத்துமீறலை எதிர்த்தும், கட்டுமானப் பணிகளுக்குத் தடை கோரியும் வினோத் ராகவேந்திரா சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், வள்ளலார் சர்வதேச ஆய்வு மையக் கட்டிடங்கள் கட்டுவதற்கு இடைக்காலத் தடை விதித்தும், புதிய கட்டுமானங்கள் எழுப்ப, சென்னை ஐகோர்ட்டு விதித்த இடைக்காலத் தடை தொடரும் என்றும் கூறி, சுப்ரீம் கோர்ட்டு ஆணை பிறப்பித்துள்ளது.
வள்ளலார் பெருமானின் பக்தர்களுக்கு, மிகுந்த ஆறுதலாக அமைந்துள்ள சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு, பொதுமக்கள் வழிபாட்டு முறையைச் சிதைக்க முயன்ற திமுக அரசுக்கு விழுந்த சம்மட்டி அடியாக அமைந்துள்ளது.
திமுக அரசு, பக்தர்களை மேலும் காயப்படுத்தாமல், சர்வதேச மையக் கட்டுமானங்களை, வள்ளலார் பெருவெளியில் கட்டுவதைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.