July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

கும்பமேளாவுக்கு 150 சிறப்பு ரெயில்கள் இயக்க முடிவு

1 min read

Decision to run 150 special trains for Kumbh Mela

23.1.2025
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா கடந்த 13-ந் தேதி தொடங்கியது. அடுத்த மாதம் (பிப்ரவரி) 26-ந் தேதி வரை தொடர்ந்து 45 நாட்களுக்கு கும்பமேளா விழா நடைபெறுகிறது. பிரயாக்ராஜ் நகரில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் ‘திரிவேணி சங்கமம்’ என்ற இடத்தில் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். கும்பமேளாவின் முக்கிய நிகழ்வான ராஜ குளியல் (மகர சங்கராந்தி) கடந்த 14-ந் தேதி நடந்தது. அப்போது 3½ கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடினர்.
கும்பமேளா தொடங்கியதில் இருந்து தற்போது வரையில் 9 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் கும்பமேளாவின் அடுத்த முக்கிய நிகழ்வான மவுனி அமாவாசை வருகிற 29-ந் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் சுமார் 10 கோடி பக்தர்கள் புனித நீராடுவர்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. மவுனி அமாவாசையையொட்டி அதிக அளவில் பக்தர்கள் வருவதை கருத்தில் கொண்டு கும்பமேளாவுக்கு 150 சிறப்பு ரெயில்களை இயக்க பிரயாக்ராஜ் கோட்டம் விரிவான திட்டங்களை வகுத்துள்ளது.
சிறப்பு ரெயில்களை இயக்குவதுடன், பயணிகளுக்கு சுமுகமான அனுபவத்தை உறுதி செய்வதற்காக, வண்ண குறியிடப்பட்ட டிக்கெட் மற்றும் தங்குமிடம் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பிரயாக்ராஜ் ரெயில்வே கோட்டத்தின் மூத்த மக்கள் தொடர்பு அதிகாரி அமித் மாளவியா இது குறித்து கூறியதாவது:-

ஜனவரி 29-ந் தேதி மவுனி அமாவாசை அன்று 150-க்கும் மேற்பட்ட சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். அவற்றில் பெரும்பாலானவை பிரயாக்ராஜ் சந்திப்பில் இருந்து இயக்கப்படும்.

குறிப்பிட்ட நேரத்தில் இயக்கப்படும் வழக்கமான ரெயில்களுடன், கோட்டத்தில் உள்ள மற்ற ரெயில் நிலையங்களில் இருந்தும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

இந்த திட்டங்களின் மூலம் பிரயாக்ராஜ் ரெயில்வே கோட்டம், மவுனி அமாவாசை அன்று தோராயமாக ஒவ்வொரு 4 நிமிடங்களுக்கும் ஒரு ரெயிலை இயக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

2019-ல் மவுனி அமாவாசையின் போது இயக்கப்பட்ட 85 ரெயில்களை விஞ்சும் வகையில், ஒரே நாளில் 150 சிறப்பு ரெயில்களை இயக்குவது ஒரு முக்கிய சாதனையாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.