கவர்னரின் தேநீர் விருந்து: காங்கிரஸ், மார்க்சிஸ்ட் புறக்கணிப்பு
1 min read
Governor’s tea party: Congress, Marxist boycott
23.1.2025
குடியரசு தினத்தன்று கவர்னர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன
சென்னை கவர்னர் மாளிகையில் குடியரசு தினத்தன்று தேநீர் விருந்து நடப்பது வழக்கம். இந்த தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும். இந்நிலையில், கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.
இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கை: ஆர்.என்.ரவி தமிழக கவர்னராக பதவியேற்றதில் இருந்து தமிழர்களின் நலனுக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசுக்கும் எதிராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரது செயல்பாடுகளால் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க முடியவில்லை.
சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறார். இவரின் செயல்பாடுகளை கண்டிக்கும் வகையில் குடியரசு தின நாளில் அவர் அளிக்கும் குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்சியையும், தேநீர் விருந்தையும் தமிழக காங்கிரஸ் சட்டசபை எம்.எல்.ஏ.,க்கள் புறக்கணிக்கின்றோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.