ஐதராபாத்தில் மனைவியை கொன்று உடலை வெட்டி குக்கரில் வேக வைத்த கணவன்
1 min read
Husband kills wife, dismembers body and cooks her in cooker in Hyderabad
23.1.2025
தெலுங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டம் ஜிலேல குடா, நியூ வெங்கட்ராமா காலனியை சேர்ந்தவர் குருமூர்த்தி (வயது 39). முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி வெங்கட மாதவி (35). இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற குரு மூர்த்தி காஞ்சனப்பேட்டையில் காவலாளியாக வேலை செய்து வந்தார். சங்கராந்தி பண்டிகைக்கு பாட்டி வீட்டுக்கு சென்ற குழந்தைகளை அழைத்து வருவது சம்பந்தமாக கடந்த 16-ந்தேதி கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த குருமூர்த்தி வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து மனைவியின் தலையில் பலமாக தாக்கினார். படுகாயம் அடைந்த வெங்கட மாதவி ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். மனைவி இறந்து விட்டதாக எண்ணிய குருமூர்த்தி கொலையை மறைக்க முடிவு செய்தார்.
அதன்படி ஈவு இரக்கமின்றி மனைவியின் உடலை துண்டு துண்டாக வெட்டினார்.
பின்னர் எலும்புகளை தனியாகவும், சதைகளை தனியாகவும் பிரித்தெடுத்தார். அவற்றை குக்கரில் போட்டு வேக வைத்தார். வேகவைத்த சதைகள், எலும்பு துண்டுகளை ஜில்லேலவில் உள்ள குளத்தில் வீசிவிட்டு ஒன்றும் தெரியாதது போல் வீட்டிற்கு வந்தார்.
கடந்த 18-ந்தேதி வெங்கட மாதவியின் தாயார் சுப்பம்மாவுக்கு போன் செய்த குருமூர்த்தி மனைவி தன்னிடம் சண்டை போட்டுக் கொண்டு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினார். உங்களுடைய வீட்டிற்கு வந்தாரா என கேட்டார். அவர் மகள் வரவில்லை என தெரிவித்தார். மேலும் குருமூர்த்தியுடன் சென்று மகளைக் காணவில்லை என மீர்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து குருமூர்த்தியின் வீட்டின் முன்பாக பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் வெங்கட மாதவி வீட்டுக்கு செல்லும் காட்சிகள் மட்டும் பதிவாகி இருந்தது. அவர் வீட்டில் இருந்து வெளியே செல்லும் காட்சிகள் எதுவும் பதிவாகவில்லை. குருமூர்த்தி மட்டும் அடிக்கடிக்கு வெளியே சென்று வந்த காட்சிகள் இருந்தன.
இதனால் குருமூர்த்தி மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரைப் பிடித்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் மனைவியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி குக்கரில் வேகவைத்து குளத்தில் மீன்களுக்கு இரையாக வீசி விட்டதாக தெரிவித்தார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் வழக்கு பதிவு செய்து குளத்தில் வெங்கட மாதவியின் உடல் பாகங்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.