தேசிய சுகாதார திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
1 min read
National Health Scheme extended for another 5 years
23.1.2025
பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் பணிகள் பற்றி விவாதிக்கப்பட்டன. இந்த திட்டத்தின் சாதனைகள் மந்திரிசபைக்கு தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் இறப்பு வீதம் உலக அளவில் நோக்கும்போது இந்தியாவில் 60 சதவீதம் குறைந்திருப்பதை தெரிவித்தனர். 2015-ம் ஆண்டு ஒரு லட்சம் மக்களுக்கு 237 பேராக இருந்த காசநோய் வீதம் 2023-ம் ஆண்டு 195 ஆக குறைந்ததும் தெரிவிக்கப்பட்டது. காசநோய் இறப்பு வீதமும் 28 சதவீதத்தில் இருந்து 22 சதவீதம் குறைந்ததையும் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து இந்த திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு தொடர மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
இதைப்போல பிரதமர் தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரிசபை கூட்டமும் நடந்தது. இதில் சணல் உற்பத்தி மற்றும் சணல் விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை போன்றவை பற்றி விவாதிக்கப்பட்டது.
இந்த கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி பின்னர் மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை மந்திரி பியூஷ் கோயல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேசிய சுகாதார திட்டம் கடந்த 10 ஆண்டுகளில் வரலாற்று இலக்குகளை எட்டிள்ளது. 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளுக்கு இடையே 12 லட்சம் சுகாதார பணியாளர்கள் தேசிய சுகாதார திட்டத்தில் இணைந்துள்ளனர். மேலும் இந்தியா இந்த திட்டத்தின் கீழ் கொரோனா தொற்றை மிக திறமையாக எதிர்த்து போராடியது.
சிறப்பு வாய்ந்த இந்த திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு தொடர மந்திரிசபை ஒப்புதல் அளித்து இருக்கிறது.
இதைப்போல பொருளாதார விவகாரங்களுக்கான மந்திரிசபையின் நிதிக்குழு 2025-26-ம் ஆண்டு சந்தை பருவத்துக்கு சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஒப்புதல் அளித்து உள்ளது.
அதன்படி குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.5,650 ஆக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது கடந்த ஆண்டைவிட குவிண்டாலுக்கு ரூ.315 அல்லது 6 சதவீதம் அதிகம் ஆகும். இதன்மூலம் உற்பத்திச்செலவில் 66.8 சதவீதம் விவசாயிகளுக்கு திரும்ப கிடைக்கும்.
2014-ம் ஆண்டு குவிண்டாலுக்கு ரூ.2,400 மட்டுமே வழங்கப்பட்டது. 2004-2005-ம் ஆண்டு முதல் 2013-2014 வரை ரூ.441 கோடி குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்பட்ட நிலையில், 2014-2015-ம் ஆண்டு முதல் 2024-2025-ம் ஆண்டுவரை ரூ.1,300 கோடி வழங்கப்பட்டு உள்ளது.
நாட்டில் 40 சதவீதம் விவசாயிகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சணல் தொழிலை நம்பி உள்ளனர். சணல் ஆலைகளில் 4 லட்சம் தொழிலாளர்கள் நேரடி வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.