டங்ஸ்டன் கனிம சுரங்கம் ஏலம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு
1 min read
Tungsten mineral mine auction canceled: Central government announcement
23.1.2025
மதுரை நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கான ஏலம் ரத்து செய்யப்படுவதாக மத்திய சுரங்கத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி கிராமத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஹிந்துஸ்தான் நிறுவனத்திற்கு மத்திய அரசு ஒப்பந்தம் வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் பா.ஜ., உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக சட்டசபையில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிரான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், மத்தியில் ஆளும் கட்சியான பா.ஜ.,வின் மாநில தலைவர் அண்ணாமலை, கண்டிப்பாக டங்ஸ்டன் சுரங்கம் கொண்டு வர அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியாக கூறினார். இதன் ஒரு பகுதியாக, டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்டக்குழுவினருடன் அண்ணாமலை மற்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் டில்லி சென்றனர். நேற்று அவர்கள் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து பேசினர். இன்று இது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகும் என அண்ணாமலை கூறியிருந்தார்.
இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் நாயக்கர்பட்டி டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை மத்திய சுரங்கத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. நேற்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்த போராட்டக்குழுவினர், நாயக்கர்பட்டி டங்ஸ்டன் சுரங்கம் அரிட்டாபட்டி பல்லுயிர் பாரம்பரிய தலம் மற்றும் பல கலாசார பாரம்பரிய தலங்களை உள்ளடக்கி உள்ளதாக கூறியிருந்தனர்.