குற்றாலத்தில் விபத்தில் ஒருவர் பலி- வாகனம் ஓட்டிய 17 வயது சிறுவனின் தந்தை கைது
1 min read
One killed in accident in Courtallam – Father of 17-year-old boy driving arrested
25/1/2025
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் 17 வயது சிறுவன் ஓட்டிய இருசக்கர வாகனம் விபத்தில் ஓரு மாணவர் உயிரிழந்த நிலையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிய சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பைஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் ஏற்கனவே பலமுறை 18 வயது நிரம்பாத சிறுவர், சிறுமிகள் இருசக்கரம் அல்லது நான்கு சக்கர வாகனம் இயக்கினால் வாகனம் பறிமுதல் செய்து அவர்களின் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொடர்ந்து எச்சரித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம்
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் பிளஸ்- 2 படிக்கும் 17 வயது சிறுவர்கள் குடியிருப்பு பகுதியைச் சார்ந்த சக்திவேல் என்பவரது மகன் முத்துக்குமார் மற்றும் அவரது நண்பன் காசி மேஜர் புறம் பகுதியைச் சார்ந்த காந்தி என்பவர் மகன் ராகேஷ் (வயது 17) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் குற்றாலம் பேருந்து நிலையம் அருகே சென்ற போது திடீரென நிலை தடுமாறியதில் பின் இருக்கையில் இருந்த முத்துக்குமார் கீழே விழுந்துள்ளார் . அப்போது எதிரே வந்த ஒரு வேன் சிறுவனின் மீது ஏறியதில் 17 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து குற்றாலம் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வேனை ஓட்டிவந்த கீழவீராணம் பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டியன் என்பவரது மகன் அன்னராஜா (வயது 49) என்பவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினார்கள். மேலும் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 17 வயது சிறுவன் ராகேஷின் தந்தை குற்றாலம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த காந்தி (வயது 50) என்பவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் கூறியிருப்பதாவது:-
18 வயது நிரம்பாத சிறுவர், சிறுமிகள் இருசக்கர அல்லது நான்கு சக்கர வாகனம் இயக்கினால் வாகனம் பறிமுதல் செய்து அவர்களின் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதில் பெற்றோர்கள் அலட்சியம் காட்டக்கூடாது. தங்கள் பிள்ளைகளை ஓட்டுநர் உரிமம் இல்லாமல் எக்காரணம் கொண்டும் வாகனத்தை இயக்க அனுமதிக்க கூடாது. இந்த விஷயத்தில் பெற்றோர்கள் மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என்று தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.