நெல்லையில் தாய் சடலத்தை சைக்கிளில் கொண்டு சென்ற மகன்: கண்டனம் குவிகிறது
1 min read
Son who carried mother’s body on bicycle in Nellai: Condemnation is mounting
25.1.2025
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே வடக்கு மீனவன்குளத்தைச் சேர்ந்த ஜெபமாலை மனைவி சிவகாமியம்மாள் (வயது 65). மூன்று மகன்கள். மூத்த மகன் சவரிமுத்து கீழக்கடையத்தில் வசிக்கிறார் இரண்டாவது மகன் செல்வம் இறந்துவிட்டார். மூன்றாவது மகன் பாலன் (38) , தாயை கவனித்து வந்தார். சிவகாமிக்கு தீவிர மன சிதைவு நோய் இருந்தது. இதற்காக அடிக்கடி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தாயை கொண்டு வந்து சிகிச்சை பெற்று வந்தார்.
பாலனுக்கும் ஒரு விபத்தில் தலையில் காயம் ஏற்பட்டதால் மனம் நலம் பாதிக்கப்பட்டவர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவகாமியம்மாளை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதித்திருந்தார். நேற்று முன்தினம் காலை அவரது உடல்நிலை சீரியஸ் ஆனது. எனவே வேறு நபரை அழைத்து வரும்படி மருத்துவமனையில் பாலனிடம் கூறினர். உதவிக்கு யாரும் இல்லாததால் அவர் தவித்தார். எனவே சாகும் தருவாயில் தமது தாயாரை மருத்துவமனையில் இருந்து வெளியே அழைத்துச் சென்றார்.
மருத்துவமனைக்கு அருகே உள்ள ஒரு கோவில் வளாகத்தில் தாயாருக்கு காபி வாங்கி கொடுத்தார் அப்போதே காபி உட்கொள்ள முடியவில்லை. சிறிது நேரத்தில் அவர் இறந்தார். காலை 11 மணியளவில் இறந்த தாயின் உடலை என்ன செய்வதென்று தெரியாத பாலன் மாலையில் தமது சைக்கிளில் கட்டி உருட்டியபடியே தமது ஊருக்கு எடுத்துச் சென்றார்.
திருநெல்வேலி நாகர்கோவில் நான்கு வழிச்சாலையில் நாங்குநேரிக்கு முன்னதாக மூன்றடைப்பு பகுதியில் இரவு 10 மணி அளவில் அவர் ஒரு சடலத்துடன் செல்வதை பார்த்த மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் அவரை வழிமறித்து விசாரித்தனர். தாயார் இறந்திருப்பதை உறுதி செய்தனர். எனவே ஆம்புலன்ஸ் மூலம் மீண்டும் உடலை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். நேற்று பிரேத பரிசோதனைக்கு அப்புறம் பிறகு உடல் பாலன் மற்றும் அவரது அண்ணன் சவரிமுத்து அழைத்து ஒப்படைக்கப்பட்டது.
பாலனுக்கும் மனநலம் பாதிப்பு இருப்பதால் யாரையும் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. வறுமையில் இருந்தார். எனவே வீட்டுக்கு உடலை கொண்டு செல்வதிலேயே குறியாக இருந்தார். திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் இருந்து தமது வீட்டுக்கு செல்லும் வழியில் 18 கிலோமீட்டர் தூரம் தாயின் உடலை சைக்கிளின் பின் கேரியரில் வைத்து கட்டி வைத்து உருட்டியபடியே சென்றது பார்த்தவர்களை கண்கலங்க செய்தது. அதில் யாரோ தான் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உதவிக்கு இல்லாதவர்கள், வறியவர்கள் இறக்கும் தருவாயில் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பதிலாக, தானாக தாங்களாகவே வெளியே சென்றார்கள் என கணக்கு காட்டி அனுப்புவதில் தீவிரமாக உள்ளனர். நேற்றும் சிவகாமி அம்மாள் அப்படித்தான் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனை டீன் டாக்டர் ரேவதி கூறுகையில், ‘பாலன் தன் தாயாரை அழைத்துச் செல்வதாக பிடிவாத்துடன் கேட்கும் போது நாங்கள் எதுவும் செய்ய முடியவில்லை எனவே அவரை அனுப்பி வைத்தோம் அவர் இறந்தது எங்களுக்கு உடனடியாக தெரியவில்லை’ என்றார்.
இந்த சம்பவத்திற்கு பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் “இறக்கும் தருவாயில் இருக்கும் ஒரு நோயாளியை மருத்துவமனையிலிருந்து வெளியேற அனுமதித்தது மருத்துவமனை அதிகாரிகளின் மனிதாபிமானமற்ற செயல். இது கடும் கண்டனத்திற்குரியது. அரசு மருத்துவமனைக்கு வருபவர்கள் பெரும்பாலும் ஏழையெளிய மக்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, இனி வருங்காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடக்காதவாறு அரசு விழிப்புடன் இருக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
டி.டி.வி.தினகரன் விடுத்துள்ள அறிக்கையில் “திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை வழங்கி அவர்களை குணப்படுத்த வேண்டிய மருத்துவர்களே, எதாவது காரணத்தை கூறி அவர்களை வெளியே அனுப்பி வைத்திருக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது மனிதநேயமற்ற செயலாகும்.
திருநெல்வேலி அரசு மருத்துவமனை வளாகத்தில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, இதுபோன்ற செயல்கள் இனியும் தொடராத வகையில் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் போதுமான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.” என்று கூறியுள்ளார்.
அன்புமணி ராமதாஸ் கூறும்போது, “நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து எத்தகைய சூழலில் சிவகாமியம்மாள் அனுப்பப்பட்டார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். இனிவரும் காலங்களில் உயிரிழக்கும் நிலையில் உள்ளவர்களை வீட்டிற்கு அனுப்பி வைப்பதை தவிர்க்க வேண்டும். சிலர் சென்டிமெண்ட் காரணமாக ஆபத்தான நிலையில் உள்ளவர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று உறவினர்கள் விரும்பினால், மருத்துவப் பணியாளர்களின் கண்காணிப்பில், உரிய வசதிகள் கொண்ட அவசர ஊர்தி வாயிலாக மட்டுமே அவர்கள் அனுப்பி வைக்கப்படுவதை மருத்துவமனை நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும்.” என்று கூறியுள்ளார்.