காதலி பேச மறுத்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை
1 min read
College student commits suicide after girlfriend refuses to talk to him
26.1.2025
திருவண்ணாமலை மாவட்டம் தொண்டமானூர் கிராமத்தை சேர்ந்தவர் சுதேசி (வயது 19). இவர், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு விக்டோரியா ஆண்கள் விடுதியில் தங்கியிருந்து, மாநில கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
சுதேசி, நேற்று முன்தினம் வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றுவிட்டு விடுதியில் உள்ள தனது அறைக்கு திரும்பி வந்தார். அறையில் யாரும் இல்லாத நேரத்தில் சுதேசி, மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள், திருவல்லிக்கேணி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சுதேசி உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், சுதேசி தனது சொந்த ஊரில் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்ததும், கருத்து வேறுபாடு காரணமாக அந்த பெண். சுதேசியிடம் சரியாக பேசாமல் இருந்ததும் தெரியவந்தது. காதலி பேசாததால் ஏற்பட்ட விரக்தியில் சுதேசி தற்கொலை செய்து கொண்டதும் தெரிந்தது. இருப்பினும் அவரது தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.