டெல்லியில் களைகட்டிய குடியரசு தின விழா
1 min read
Republic Day celebrations in Delhi marred by chaos
26.1.2025
நாடு முழுக்க குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தேசிய கொடியேற்றியும், இனிப்புகள் வழங்கியும் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஆளுநர்கள் தேசிய கொடியேற்றி வைத்தனர்.
இதோடு, ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திலும் சிறப்பு அணிவகுப்பு, கலை மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த வரிசையில், டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு தேசிய கொடியேற்றி வைத்தார். இதைத் தொடர்ந்து ஹெலிகாப்டர்களில் இருந்து பூக்கள் தூவப்பட்டன.
கொடியேற்றத்தைத் தொடர்ந்து முப்படையை சேர்ந்தவர்களின் சிறப்பு சாகசங்கள், 16 மாநிலங்களின் சிறப்பு அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு உள்ளிட்டவை நடைபெற்றன. இதுதவிர, நாட்டின் ராணுவ வலிமையை எடுத்துரைக்கும் வகையில் பீரங்கிகள், ஏவுகணைகள் வைக்கப்பட்டன. மேலும் போர் விமானங்களின் சாகசம் நிகழ்ச்சியில் பார்வையாளர்களை கவர்ந்தது.
சாகசம் மற்றும் கலை, பண்பாட்டு நிகழ்ச்சிகள் துவங்கும் முன்பே மாணவ, மாணவிகள் அணிவகுப்பு, முப்படையினர் அணிவகுப்பு பார்வையாளர்களிடம் இருந்து கைத்தட்டல்களை பெற்றது. சுமார் 90 நிமிடங்கள் வரை நடந்த குடியரசு தின நிகழ்ச்சியை குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுடன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ கண்டுகளித்தார்.
டெல்லி கர்தவ்ய பாதையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் அரசியல் தலைவர்கள், அரசு துறை அதிகாரிகள், பொது மக்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பலர் என சுமார் 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.