சைஃப் அலி கான் வழக்கில் தவறாக கைதானவரின் வேலை பறிபோனது; திருமணமும் நின்றது
1 min read
Man wrongly arrested in Saif Ali Khan case loses job; marriage stalled
27.1.2025
பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான், ஜனவரி 16 அன்று மும்பை பாந்ராவில் உள்ள தனது வீட்டில் வைத்து கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கத்தி குத்தில் காயமடைந்த சைஃப் அலி கான் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டார். அறுவை சிகிச்சை செய்து கொண்ட சைஃப் அலி கான் சில தினங்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.
சைஃப் அலி கானை கத்தியால் குத்தியவர் என்று சந்தேகத்தின்பேரில் முகமது ஷரிபுல் என்ற வங்கதேச நபரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக சிசிடிவி காட்சிகளில் உள்ள நபரின் முக தோற்றத்தை ஒத்திருத்த சிலரை சந்தேகத்தின் பேரில் மும்பை போலீசார் சிலரை கைது செய்து விசாரித்தனர்.
அந்த வகையில் மும்பையில் மேற்கு மண்டல ரெயில்வேதுறையின்கீழ் இயங்கும் சுற்றுலா நிறுவனத்தில் ஓட்டுநரான பணிபுரிந்த ஆகாஷ் கனோஜியா[வயது 31] என்ற நபர் சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் கழித்து மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சில மணி நேர விசாரணைக்குப் பின் அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் இந்த ஒரு கைது ஆகாஷ் கனோஜியா வாழ்வையே புரட்டிப் போட்டுள்ளது.
மும்பை போலீசார் என் வாழ்வை சிதைத்து விட்டனர் என்று ஆகாஷ் கனோஜியா குற்றம்சாட்டியுள்ளார்.
டிவியில் எனது புகைப்படங்கள் வெளியானதால் என்னை வேலையில் இருந்து நீக்கிவிட்டார்கள், நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்றுவிட்டது. குடும்பமே அவமானத்தைச் சந்தித்துள்ளது. எனக்கு நீதி வேண்டும் என்று தெரிவித்துள்ளார். நிச்சயிக்கப்பட்ட பெண்ணை சந்திப்பதற்காக மும்பையில் இருந்து பிளாஸ்பூர் சென்றுகொண்டிருந்த போதுதான் போலீஸ் அவரை கைது செய்துள்ளது.
சிசிடிவியில் உள்ள நபருக்கு மீசை இல்லை என்றும் தனக்கு மீசை உள்ளது என்றும், அதை போலீஸ் கவனிக்கத் தவறியது என்றும் அவர் தெரிவித்துள்ளார். என்னை கைது செய்ததோடு மட்டுமல்லாமல், நான் தான் அவர்கள் சந்தேகப்படும் குற்றவாளி என்று ஊடகத்திடம் எனது புகைப்படத்தை போலீஸ் கொடுத்துள்ளது. இதை பார்த்த பெண் வீட்டார் திருமணத்தை ரத்து செய்துவிட்டனர் என்று ஆகாஷ் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.