நிர்மலாசீதாராமனுடன் தங்கம் தென்னரசு, கனிமொழி எம்.பி. சந்திப்பு
1 min read
Minister Thangam Thennarasu, Kanimozhi MP meet with Union Finance Minister
27.1.2025
தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி ஆகியோர் இன்று புதுடெல்லியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்தனர். அப்போது அவர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.1,056 கோடி நிதியினை உடனடியாக விடுவிக்க ஆவன செய்யுமாறு வலியுறுத்தினர்.
இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.1,056 கோடி நிதியினை விடுவிக்கக் கோரி மாண்புமிகு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 13.01.2025 அன்று பிரதமருக்குக் கடிதம் மூலம் வலியுறுத்தியிருந்தார்.
தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி மற்றும் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆகியோருடன் இணைந்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை புதுடெல்லியில் நேரில் சந்தித்து, இத்திட்டத்திற்கு மத்திய ஊரக வளர்ச்சித் துறை மூலம் வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை உடனே விடுவிக்க ஆவன செய்யுமாறு வலியுறுத்தினோம்” என்று தெரிவித்துள்ளார்.