மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசல்; 15 பேர் பலி?
1 min read
15 killed in stampede at Maha Kumbh Mela?
29.1.2025
உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வருகிறது. கடந்த 14ம் தேதி தொடங்கிய கும்பமேளா அடுத்த மாதம் 26ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது. கும்பமேளா நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
இதனிடையே, கும்பமேளா நிகழ்ச்சியில் இன்று கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அமாவாசை தினமான இன்று அதிகாலை திரிவேணி சங்கமத்தில் புனித நீராட லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். அதிகாலை 3 மணியளவில் மக்கள் அதிக அளவில் திரண்டபோது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
கூட்ட நெரிசலில் சிலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. மேலும், சிலர் கீழே விழுந்தனர். இதனால், கீழே விழுந்தவர்கள் மீது மற்றவர்களும் விழுந்துள்ளனர். இந்த சம்பவத்தில் பலர் மயங்கி விழுந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் அனைவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்நிலையில், கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கும்பமேளா நடைபெறும் பகுதியில் பணியாற்றி வரும் டாக்டர், ஏ.எப்.பி. செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர்’ என தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதா? எத்தனைபேர் உயிரிழந்துள்ளனர்? காயமடைந்தோர் எத்தனைபேர்? உள்பட எந்த விவரத்தையும் உத்தரபிரதேச அரசு இதுவரை வெளியிடவில்லை.