டிஜிட்டல் கைது செய்வதாக மிரட்டி ஆசிரியையிடம் ரூ.5.50 கோடி பறிப்பு- 3 பேர் கைது
1 min read
Rs. 5.50 crore extorted from teacher by threatening digital arrest – 3 arrested
29.1.2025
மும்பையை சேர்ந்த ஓய்வுபெற்ற 67 வயது ஆசிரியை ஒருவருக்கு, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16-ந்தேதி செல்போனில் வீடியோ அழைப்பு ஒன்று வந்தது. அந்த அழைப்பை ஆசிரியை ஏற்று பேசினார். அப்போது, எதிர்முனையில் போலீஸ் சீருடையில் தோன்றிய 2 பேர் தங்களை மும்பை சைபர் பிரிவு போலீஸ் அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டனர். பின்னர் அவர்கள் ஆசிரியையிடம் உங்கள் வங்கிக்கணக்கில் இருந்து சட்டவிரோதமாக அதிகளவில் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே உங்களை டிஜிட்டல் கைது செய்யப்போகிறோம் என மிரட்டி உள்ளனர்.
இந்த வழக்கில் இருந்து தப்பிக்க பணத்தை உடனடியாக தங்களுக்கு அனுப்புமாறு கட்டாயப்படுத்தினர். இதனால் செய்வதறியாது திகைத்த ஆசிரியை தனது நிரந்தர வைப்பு தொகையில் இருந்த ரூ.5 கோடியே 26 லட்சம் மற்றும் கிரெடிட் கார்டில் இருந்து ரூ.21 லட்சத்தை எடுத்து அவர்கள் தெரிவித்த வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார்.
இதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஆசிரியை போலீசில் புகார் அளித்தார். இதில், டிஜிட்டல் கைது என்ற பெயரில் ஆசிரியையை மிரட்டி பணம் பறித்தது மும்பையை சேர்ந்த சபீர் அன்சாரி (வயது 39) மற்றும் 2 சிறுவர்கள் உள்பட 3 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.