‘வாட்ஸாப்’ வாயிலாக நோட்டீஸ் அனுப்ப கூடாதுசுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
1 min read
Supreme Court orders that notices should not be sent through WhatsApp
29.1.2025
‘வழக்கு விசாரணை தொடர்பாக ஆஜராகும்படி, குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு, ‘வாட்ஸாப்’ உள்ளிட்ட மின்னணு முறைகள் வாயிலாக நோட்டீஸ்’அனுப்ப கூடாது’ என, உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக, குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு நோட்டீஸ் அனுப்புவது தொடர்பான பிரச்னை, உச்ச நீதிமன்றத்தில் எழுந்தது.
இது தொடர்பாக ஆலோசனை வழங்க, மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுாத்ராவை, நீதிமன்றத்துக்கு உதவும் ‘அமிகஸ் கியூரி’யாக உச்ச நீதிமன்றம் நியமித்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ராஜேஷ் பிண்டால் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு கூறியதாவது:
அமிகஸ் கியூரி சித்தார்த் லுாத்ராவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை ஏற்கிறோம். அதன்படி, வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி, சட்டங்களில் ஏற்கனவே குறிப்பிட்ட முறைகளை பயன்படுத்தியே நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.
வாட்ஸாப் போன்ற மின்னணு முறைகளை பயன்படுத்தி நோட்டீஸ் அனுப்ப கூடாது. அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்கள், தங்களுடைய போலீஸ் அமைப்புகளுக்கு இதை முறையாக தெரிவிக்க வேண்டும்.
நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகள் செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க அனைத்து உயர் நீதிமன்றங்களிலும் மாதத்துக்கு ஒருமுறை கூட்டம் நடத்த வேண்டும்.