தமிழக வீரர் ,வீராங்கனைக்கு ஊக்கத்தொகை: முதல்-அமைச்சர் அறிவிப்பு
1 min read
Incentives for Tamil Nadu sportspersons and athletes: Chief Minister’s announcement
8.2.2025
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மலேசியாவில் 19 வயதிற்குட்பட்ட மகளிருக்கான டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள் ஜனவரி 18 முதல் பிப்ரவரி 2 வரை நடைபெற்றன.
இப்போட்டிகளில் தமிழ்நாட்டைச் சார்ந்த செல்வி கு. கமாலினி இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். அவர்தான் விளையாடிய ஏழு போட்டிகளில் ஒரு அரைச்சதம், 143 ரன்கள், 2 கேட்சுகள், 4 ஸ்டம்பிங் என நிகழ்த்தி அசாத்திய சாதனைகள் புரிந்துள்ளார். இந்த போட்டிகளில் கு. கமாலினி அவர்களின் பங்களிப்பால் இந்திய அணி கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
மலேசியாவில் நடைபெற்ற 19 வயதிற்குட்பட்ட மகளிருக்கான டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் கு. கமாலினி சாதனையைப் போற்றிப் பாராட்டும் வகையில், பல விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் போட்டிகளில் பங்கேற்று, தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமைகள் சேர்த்திட ஊக்கமளிக்கும் வகையிலும் கமாலினிக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூபாய் 25 லட்சம் வழங்கிட முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதே போல், டெல்லியில் நடைபெற்ற முதல் கோ கோ உலகக் கோப்பை போட்டிகள், ஜனவரி 13 முதல் ஜனவரி 19, 2025 வரை நடைபெற்றன.. இந்த போட்டிகளில் தமிழ்நாட்டைச் சார்ந்த சுப்ரமணி பங்களிப்பால் இந்திய அணி கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
மேலும், டெல்லியில் நடைபெற்ற முதல் கோ கோ உலகக் கோப்பை போட்டிகளில் சுப்ரமணி போல மேலும் பல விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் போட்டிகளில் பங்கேற்றுத் தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமைகள் சேர்த்திட ஊக்கமளிக்கும் வகையில், அவருக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூபாய் 25 லட்சம் வழங்கிட முதல்- அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது .