சிகிச்சை பெற்று வரும் பாகனை காண மருத்துவமனைக்கே சென்ற யானை
1 min read
Elephant visits hospital to see Pagan undergoing treatment
10.2.2025-
இன்றைய கால கட்டத்தில் பாசம், அன்பு என்பது வெறும் சொல்லாகவே உள்ளதாக பெரும்பாலானோர் உணர்கின்றனர். ஒருவர் காட்டும் பாசத்தை புறந்தள்ளும் சம்பவங்களே இன்றைய சமூகத்தில் அதிகமாக நடைபெறுவதாக பலர் வேதனையில் உள்ளனர். ஆறறிவு மனிதர்கள் தான் இப்படி… ஐந்தறிவு உள்ள விலங்குகள் அப்படி இல்லை என்று சமூக வலைத்தளங்களில் வெளியாகும் பல வீடியோக்கள் உணர்த்தியுள்ளன. அப்படி தற்போது பகிரப்படும் வீடியோ தான் பார்ப்பவர்களை உணர்ச்சியில் கண்ணீர் சிந்த வைத்துள்ளது.
27 வினாடிகளே ஓடும் வீடியோவில் யானை ஒன்று மருத்துவமனை வாசலில் நிற்கிறது. பிறகு, அறையின் உயரம் குறைவாக உள்ளதை உணர்ந்த யானையானது மெதுவாக குனிந்து அடிமேல் அடி வைத்து ஊர்ந்து தன்னை வளர்த்த முதியவரிடம் சென்று அதன் தும்பிக்கையை நீட்டி அவர் மீது போர்த்தியிருக்கும் துணியை விலக்குகிறது. அதன்பின் அங்கு இருக்கும் பெண் ஒருவர் யானையின் தும்பிக்கையை தூக்கி முதியவரின் கையோடு இணைக்கிறார்.
இச்சம்பவத்தை அங்கிருந்தவர்கள் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்த மனதை தொடும் வீடியோ பகிரப்பட்ட சில மணி நேரத்திலேயே 60 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களால் லைக் செய்யப்பட்டது. மேலும் பலர் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ஒரு பயனர் ‘இது அன்பின் தூய்மையான வடிவம்… விலங்குகள் தங்களைப் பராமரித்தவர்களை ஒருபோதும் மறக்காது’ என்றும் மற்றொருவர் “காதலுக்கு எல்லைகள் இல்லை என்பதற்கு இந்த வீடியோ சான்றாகும். இதுதான் மிகவும் அழகான, மனதைத் தொடும் காட்சி” என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர்.