வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா தொடர்பாக கூட்டுக்குழு அறிக்கை மாநிலங்களவையில் தாக்கல்
1 min read
Joint Committee Report on Waqf Board Amendment Bill tabled in Rajya Sabha
13/2/2025
மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை கடந்த ஆண்டு மக்களவையில் தாக்கல் செய்தது. இதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்தன.
இதனையடுத்து பாராளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. பாராளுமன்ற கூட்டுக் குழுவில் அவசரம் அவசரமாக விவாதிக்கப்பட்டு கடந்த மாதம் இறுதியில் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
பாராளுமன்ற கூட்டுக் குழுவில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த 572 திருத்தங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. ஆனால் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் முன்வைத்த 14 திருத்தங்கள் மட்டும் ஏற்கப்பட்டன.
வக்பு வாரிய சட்ட திருத்தங்கள் சிறுபான்மையினருக்கு எதிராக உள்ளதாக எதிர்க்கட்சிகள் இந்த திருத்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா தொடர்பாக கூட்டுக்குழு அறிக்கை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
மாநிலங்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா கூட்டுக்குழு அறிக்கை ஏற்கப்பட்டது.
இதையடுத்து வக்பு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு முழக்கமிட்டனர். இதனால் மாநிலங்களவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா கூட்டுக்குழு அறிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டதால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.