திருப்பதி அலிபிரி நடைபாதையில் சிறுத்தை நடமாட்டம்-பக்தர்கள் ஓட்டம்
1 min read
Leopard roaming on Tirupati Alipiri footpath
14.2.2025
திருப்பதி அலிபிரி நடைபாதை வழியாக நேற்று இரவு பக்தர்கள் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர். 7-வது மைலில் உள்ள முக்குபாவி என்ற இடத்தில் சிறுத்தை ஒன்று நடைபாதை அருகே வந்து நின்றது.
சிறுத்தையை கண்ட பக்தர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து திருப்பதி தேவஸ்தான வனத்துறை மற்றும் விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். நடைபாதையை விட்டு நகராமல் சிறுத்தை நின்றது.
தேவஸ்தான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். சத்தங்களை எழுப்பி சிறுத்தையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
இதையடுத்து பக்தர்கள் குழுக்களாக செல்ல அனுமதித்தனர். சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பக்தர்கள் யாரும் மலை பாதையில் தனியாக நடந்து செல்லக்கூடாது என தேவஸ்தான அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும் அப்பகுதியில் தேவஸ்தான அதிகாரிகள் தொடர்ந்து சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
வன விலங்குகளை கண்டால் தகவல் தெரிவிக்க வேண்டும். அவற்றை துன்புறுத்த வேண்டாம் என அறிவுறுத்தினர்.