July 2, 2025

Seithi Saral

Tamil News Channel

மத்திய அரசால் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைவதில் தாமதம்: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

1 min read

Central government delays in reaching people with welfare schemes: Chief Minister M.K. Stalin

15.2.2025
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், செங்கோட்டையன், அன்புமணி ராமதாஸ், திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் இந்த ஆலோனைக் கூட்டத்தில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் 67 திட்டங்களைக் கண்காணிக்கவும் அதனை செயல்படுத்தவும் இந்த மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (DISHA) கூட்டத்தை நாம் நடத்தி வருகிறோம். திட்டங்களுக்கு ஒதுக்கப்படக்கூடிய நிதியை முறையாக செலவிடுவது, திட்ட செயல்பாடுகளைக் கண்காணிப்பது, மத்திய, மாநில, மாவட்ட மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கிடையே இணக்கமான நிலையை உருவாக்குவது, தேர்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மத்திய அரசினுடைய திட்ட செயல்பாடுகளை ஆய்வு செய்ய வழிவகை செய்வது ஆகிய பணிகளை இதன் மூலமாக நாம் செய்து வருகிறோம்.
கடந்த கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையன் கேட்டுக் கொண்டதன்படி, தேங்காய் விவசாயிகளுக்கு மிக விரைவாக பணப்பட்டுவாடா செய்திட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் PMAYG திட்டத்தின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு அலகு தொகையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். இது தொடர்பான கருத்துரு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சுப்புராமன் (SCOPE) கோரிக்கையை ஏற்று குழந்தைகளுக்கு கட்டப்படும் அங்கன்வாடி கழிப்பறைகளுக்கான மதிப்பீடுத் தொகை 2025-26 நிதியாண்டிலிருந்து 30 ஆயிரம் ரூபாயிலிருந்து 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதை தொடக்கத்திலேயே தெரிவித்துக் கொள்கிறேன்.
இக்கூட்டத்தில், பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டம், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம், துளிநீர் அதிக பயிர், பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா, மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை போன்ற திட்டங்களின் செயல்பாடுகள் இந்தக் கூட்டத்தில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

ஒவ்வொரு திட்டம் குறித்தும் முக்கியமான சில தகவல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டத்தினை செயல்படுத்துவதைப் பொறுத்தவரை தமிழ்நாடு, இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. இந்தத் திட்டத்தின் நான்காவதுகட்ட செயல்பாட்டை 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகையினை அடிப்படையாகக் கொண்டு 500-க்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட, இதுவரை இணைப்புச் சாலை வசதி இல்லாத குக்கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இப்படியான 7 கிராமங்கள்தான் தமிழ்நாட்டில் இருக்கின்றன. வனப்பாதுகாப்பு சட்டத்தின்படி அனுமதி பெற்ற பிறகுதான் அங்கே இணைப்புச் சாலை வசதி ஏற்படுத்த முடியும். அதனால், ஏற்கனவே உள்ள சாலைகளை மேம்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும். இந்தக் குழு உறுப்பினர்களின் ஆலோசனைகளுடன் மீண்டும் மத்திய அரசுக்கு இது குறித்து வலியுறுத்தப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
  • பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டத்தினப் பொறுத்தவரை ஒரு வீட்டிற்கான அலகுத் தொகை 1,20,000 ரூபாய் ஆகும். இதில், மத்திய அரசு 72,000 ரூபாயும், மாநில அரசு 48,000 ரூபாயும் வழங்கி வரும் நிலையில், மாநில அரசு கூடுதலாக 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை மேற்கூரை அமைப்பதற்காக வழங்கி வருகிறது. 2021-2022 ஆண்டு வரை 3,61,591 வீடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இதுவரை, 3,43,958 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வீடுகளை கட்டும் பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நமது ஆட்சியில் இந்தத் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
  • பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீட்டிற்கான கட்டுமானப் பொருட்களின் விலை மற்றும் தொழிலாளர்களின் கூலி ஆகியவை கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளது. அதனால், நான் தொடக்கத்திலேயே தெரிவித்தபடி, அலகு தொகையினை குறைந்தபட்சம் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டுமென்று மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். ஆனால், இதுவரை எந்த பதிலும் வரவில்லை. இந்தக் குழு மூலமாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி மீண்டும் மத்திய அரசை வலியுறுத்துவோம்.
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தினை செயற்படுத்துவதில் நமது திராவிட மாடல் தமிழ்நாடு அரசு எப்போதுமே முன்னோடியாக இருந்து வருகிறது. 2023-24ஆம் ஆண்டில் தேசிய சராசரியான 52 நாட்களைவிட அதிகமாக 59 நாட்கள் வேலை வழங்கியிருக்கிறோம். நவம்பர் மாதம் வரை தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டு அதற்குப் பின்னால், மத்திய அரசால் ஊதியம் வழங்கப்படாமல் இருக்கிறது.

இதுதொடர்பாக, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். மத்திய அமைச்சர்கள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரையும், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ககன்தீப் சிங் பேடி சந்தித்து ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க கோரிக்கை வைத்துள்ளார்கள். ஆனாலும், இதுவரை நிதி வரவில்லை. ஊதிய நிலுவைத் தொகையாக 2,118 கோடி ரூபாய் வரவேண்டியுள்ளது. இது தொடர்பாக இதற்கும் இக்குழு மூலமாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசை மீண்டும் வலியுறுத்துவோம்.

அடுத்ததாக, தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ், 2023-24ஆம் ஆண்டில் 1,29,020 ஹெக்டேர் நிலப்பரப்பில் நுண்ணீர்ப் பாசன அமைப்பிற்காக 109.90 லட்சம் ரூபாய் மானியம் வழங்கி 105 விழுக்காடு சாதனை படைத்திருக்கிறோம். நடப்பாண்டில், 2024-25 ஜனவரி மாதம் வரை 76,733 ஹெக்டேர் நிலப்பரப்பில் நுண்ணுயிர் பாசன அமைப்பிற்காக 66.84 இலட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின்கீழ், உழவர்கள் அதிகப் பங்குத் தொகை செலுத்த வேண்டியிருக்கிறது. அதனால், உச்சகட்ட நிலவரம்பான 5 ஹெக்டர் என்பதனை தளர்த்த மத்திய அரசினை வலியுறுத்த நான் உறுப்பினர்களை கேட்டுக் கொள்கிறேன்.

  • ஏழை கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பேறுகாலத்தில் சத்தான உணவுக்கு ஆகும் செலவை மேற்கொள்ள நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின்கீழ் 5000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. 2023-24ஆம் ஆண்டில் 1,51,674 கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.45.52 கோடி நிதியுதவி வழங்கப்பட்டது. நடப்பாண்டில், முதல் மகப்பேறு மற்றும் இரண்டாவது பெண் குழந்தை பெறும் தாய்மார்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.
  • மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் திட்டத்தின்கீழ், மாற்றுத்திறனாளிகள் என்பதற்கான மருத்துவச் சான்றிதழினை பெறுவதற்கும், அரசின் நலத்திட்டங்களை அவர்களுக்கு எளிதாகக் கொண்டு செல்லவும் இந்தியா முழுமையம் செல்லுபடியாககூடிய தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தும் நோக்கில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் முதன்மை மருத்துவ அலுவலர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

சமூக தரவுகள் பதிவுகளில் (SRE) ஏற்கனவே மாற்றுத்திறனாளிக்கானஅடையாள அட்டை பெறப்பட்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் தரவுகளில் பதிவேற்றம் செய்யப்பட்டவர்கள் A பிரிவிலும், மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை பெறப்பட்டு,

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் தரவுகளில் பதிவேற்றம் செய்யப்படாதவர்கள் B பிரிவிலும், எந்தச் சான்றிதழ்களும் இல்லாமல் மாற்றுத்திறனாளிகள் என கணிக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் தரவுகளில் பதிவேற்றம் செய்ய வேண்டிய நபர்கள் C பிரிவிலும் பதியப்பட்டுள்ளனர். மேலும் 87,008 நபர்கள் “C பிரிவு மாற்றுத்திறனாளிகள்” என கணிக்கப்பட்டு, கண்டறியப்பட்டனர்.

இப்படி அனைத்து மாவட்டங்களிலும் கண்டறியப்பட்ட C-பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கு 1,238-க்கும் அதிகமான UDID முகாம்கள் நடத்தப்பட்டு 51,296 மாற்றுத்திறனாளிகளுக்கு UDID இணையதளம் வாயிலாக உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

உங்களுக்கெல்லாம் நான் இதுவரை தெரிவித்த தகவல்களிலிருந்து ஒன்று புரிந்திருக்கும். மாநில அரசின் திட்டம், மத்திய அரசின் திட்டம், முந்தைய அரசின் திட்டம், இந்த அரசின் திட்டம் என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் நாம் செயல்பட்டு வருகிறோம் என்பது புரிந்திருக்கும்.

மத்திய அரசின் அனைத்து திட்டங்களும் கடைக்கோடிப் பயனாளிகளுக்கும் சென்று சேர்வதில் திராவிட மாடல் அரசின் பங்கை நாம் உணர்ந்திருக்கிறோம். அதனால்தான் மாநில அரசின் பங்குத் தொகையினை காலதாமதமில்லாமல் விடுவிக்கின்றோம். ஆனால், மத்திய அரசின் நிதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுவதனால், திட்டங்களின் பயன்கள் மக்களுக்கு சென்றடைவதில் தாமதமாகிறது. உடனடியாக, நிதியை விடுவிக்க இந்த குழு மூலமாக வலியுறுத்தப்படுமென்று உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறேன்

இவ்வாறு அவர் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.