வாரணாசியில் தமிழ்ச் சங்கமம் நடப்பது மகிழ்ச்சி- பிரதமர் மோடி பெருமிதம்
1 min read
Happy to see Tamil Sangam happening in Varanasi – Prime Minister Modi is proud
15.2.2025-
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தமிழ்ச் சங்கமம் நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கலாசார மையங்களாக திகழ்ந்த வாரணாசிக்கும், தமிழகத்திற்கும் இடையேயான பிணைப்பை புதுப்பிக்கும் வகையில், ‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சி, 2022ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. 3வது ஆண்டு விழா, இன்று (பிப்.,15) தொடங்கியது. இது வருகிற 24ம் தேதி வரை நடக்க உள்ளன.
நேற்று மதியம் 3.00 மணிக்கு நடைபெற்ற தொடக்க விழாவில் மத்திய கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த முறை சித்த மருத்துவம், பாரம்பரிய தமிழ் இலக்கியம், தேசத்தின் கலாசார ஒற்றுமை ஆகியவற்றுக்கு அகத்தியர் ஆற்றிய பங்களிப்பை எடுத்துக்காட்டும் விதமாக காசி தமிழ் சங்கமம் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை, சென்னை ஐ.ஐ.டி., செய்து வருகிறது. இது குறித்து பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:-
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தமிழ்ச் சங்கமம் நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மகா கும்பமேளாவுக்கு இடையே தமிழ்ச் சங்கமம் நடப்பது முக்கியத்துவம் வாய்ந்தது.
காவிரி-கங்கை, தமிழகத்திற்கும் காசிக்கும் இடையே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொடர்பு உள்ளது. காசிக்கு வரும் தமிழக மக்கள் மறக்க முடியாத நினைவுகளுடன் திரும்பிச் செல்லட்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.