பிரபாகரன் படத்தை சீமான் பயன்படுத்த தடை விதிக்க கோரி ஐகோர்ட்டில் மனு
1 min read
Petition filed in High Court seeking ban on Seeman’s use of Prabhakaran’s film
15.2.2025
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை பொது வெளியில் பயன்படுத்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த வக்கீல் எல்.கே சார்லஸ் அலெக்சாண்டர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், “சி.பா. ஆதித்தனாரால் நாம் தமிழர் கட்சி கடந்த 1958-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அவரது மறைவுக்கு பின், திரைப்பட இயக்குநர் சீமான் 2010-ம் ஆண்டு முதல் தலைமை ஒருங்கிணைப்பாளராக நாம் தமிழர் கட்சியை நிர்வகித்து வருகிறார்.
இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் இலங்கை அரசுக்கும் இடையே யுத்தம் நடைபெற்ற இறுதி கால கட்டத்தில், விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை தாம் போர் முனையில் நேரில் சந்தித்ததாகவும், அந்த சந்திப்பின் போது ஏ.கே 47 ரக துப்பாக்கியில் போர் பயிற்சி எடுத்ததாகவும் தமிழகத்தில் சீமான் பொது மேடைகளில் பேசி வருகிறார்.
1991-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, மக்களவை தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் வந்தபோது மனித குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார். இதையடுத்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் தடை விதித்ததுடன், கடுமையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்தது. தற்போதும் இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கான தடை நீடிக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இலங்கை போர் தொடர்பாக வன்முறையை தூண்டும் வகையில், மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களையும் சீமான் பயன்படுத்தி வருகிறார்.
விடுதலை புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் தடை விதித்திருக்கும்போது, அனைத்து தேர்தல் பிரசாரங்களிலும், பிரபாகரனின் படத்தை அரசியல் ஆதாயத்திற்காக சீமான் பயன்படுத்தி வருகிறார். மேலும், பிரபாகரனுடன் தாம் இருப்பது போலவும், ஏ.கே 47 துப்பாக்கி வைத்திருப்பது போலவும் மார்பிங் செய்து அந்த படங்களை பயன்படுத்தி வருகிறார் என திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை நாங்கள்தான் கொலை செய்தோம் என சீமான் பகிரங்கமாக பேசியுள்ளார். தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை பயன்படுத்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய- மாநில அரசுகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், பிரபாகரனின் படத்தை பொது வெளியில் பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று அதில் தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.