இளைஞர்கள் படுகொலைக்கு முன்விரோதமே காரணம் – காவல்துறை விளக்கம்
1 min read
Previous enmity was the reason for the murder of the youths – Police explanation
15.2.2025
மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் அருகே உள்ள முட்டம் கிராமத்தில் கல்லூரி மாணவர் உட்பட இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், முன்விரோதம் காரணமாக இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதாக காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் காவல் சரகம், முட்டம் கிராமம், வடக்கு தெருவில் வசிக்கும் மூவேந்தன் (24 வயது) என்பவர் நேற்று முன்தினம் மாலை சுமார் 6 மணியளவில் அவரது தெருவில் நின்று கொண்டிருந்த போது. அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற அதே தெருவில் வசிக்கும் தினேஷ் (28 வயது) என்பவர் மேற்படி மூவேந்தனை பார்த்து கூச்சலிட்டு சென்றுள்ளார். இவர்களுக்குள் ஏற்கனவே குடும்ப தகராறு இருந்துள்ளது. மேலும் மூவேந்தனின் அண்ணன் தங்கதுரை (28 வயது) மற்றும் உறவினர் ராஜ்குமார் (34 வயது) ஆகிய இருவர் மீதும் மதுவிலக்கு தொடர்பான வழக்குகள் இருந்துள்ளன.
13-ம் தேதி மூவேந்தன், தினேஷை கையால் அடித்து வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது அருகில் இருந்த மக்கள் சமாதானம் செய்து இருவரையும் அனுப்பியுள்ளனர். இந்த முன்விரோதம் காரணமாக நேற்று இரவு 8.30 மணியளவில் மேற்படி தினேஷ் மற்றும் அவரது நண்பர்களான ஹரிஷ் (25 வயது), சக்தி (20 வயது), அஜய் (19 வயது) ஆகியோர் முட்டம் வடக்கு தெருவில் நின்று பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த தங்கதுரை, ராஜ்குமார், மூவேந்தன் ஆகியோர் மதுபோதையில் தினேஷிடம் தகராறு செய்து கத்தியால் தாக்க முயற்சித்தனர். அதனை தடுக்க வந்த அவரது நண்பர்கள் ஹரிஷ், அஜய் மற்றும் சக்தி ஆகியோரை மூவரும் கத்தியால் தாக்கியுள்ளனர்.
அதில் ஹரிசுக்கு வயிற்று பகுதியிலும், சக்திக்கு முதுகு பகுதியிலும் காயம் ஏற்பட்டுள்ளது. அஜய்க்கு கையில் காயம் ஏற்பட்டுள்ளது. மூவரையும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் வழியிலேயே ஹரிஷ், மற்றும் சக்தி இருவரும் இறந்துள்ளனர். இந்த வழக்கில் இறந்து போன ஹரிஷ், சக்தி மேலும் காயம்பட்ட அஜய் ஆகியோருக்கும் குற்றவாளிகளுக்கும் முன்விரோதம் ஏதும் இல்லை. தினேஷ் மீது நடந்த தாக்குதலை தடுக்க முயன்றபோது இருவர் இறந்துள்ளனர். ஒருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பாக சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தங்கதுரை, மூவேந்தன் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் மீது குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கின் மூன்று குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டும் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவும் உள்ளனர். இந்த நிலையில் சில ஊடகங்கள் மேற்படி சம்பவம் ஆனது மதுவிற்பனை தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக நடந்ததாக உண்மைக்கு மாறான செய்தி வெளியிட்டு வருகின்றனர். ஆனால் மேற்படி சம்பவமானது ஒரே ஊரில் ஒரே தெருவில் வசிக்கும் இளைஞர்களுக்குள் ஏற்பட்ட வாய் தகராறு தொடர்பாக நடந்த சம்பவம் என்பது தெரியவந்துள்ளது. மேலும் வழக்கு புலன் விசாரணையில் உள்ளது. எனவே இது தொடர்பாக உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்ப வேண்டாம் என மாவட்ட காவல்துறையின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.