முதல்-அமைச்சர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்பு
1 min read
Sengottaiyan participates in the consultative meeting chaired by the Chief Minister
15.2.2025
மத்திய அரசு திட்டங்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், அந்த திட்டங்களை சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தவும் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க. எம்.பி. துரை வைகோ, மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
அ.தி.மு.க.வின் மூத்த தலைவரும், எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தவருமான செங்கோட்டையனின் பேச்சும், செயல்பாடுகளும் கடந்த சில நாட்களாக அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்த சூழலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.