ரூ.45 லட்சம் கடன் வாங்கி அமெரிக்கா சென்றவர் 3 மணி நேரத்தில் திருப்பி அனுப்பபட்டார்
1 min read
Man who went to America with a loan of Rs. 45 lakhs was deported within 3 hours
17.2.2025
அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஆவணங்களின்றி தங்கி இருந்தவர்களை அதிகாரிகள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் முதற்கட்டமாக 104 இந்தியர்கள் இந்த மாத முதல் வாரத்திலும், 116 இந்தியர்கள் கடந்த சனிக்கிழமை அமெரிக்க போர் விமானம் மூலம் நாடு கடத்தபட்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இறக்கி விடப்பட்டனர். மூன்றாம் கட்டமாக 112 பேருடன் புறப்பட்ட அமெரிக்க ராணுவ விமானம் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு அமிர்தசரஸ் வந்து சேர்ந்தது.
அவர்களில் பஞ்சாபை சேர்ந்த சவுரவ் என்ற இளைஞர் தனது நிலை குறித்து செய்தியாளர்களிடம் விவரித்தார். அவர் கூறியதாவது:-
“ஜனவரி 27 அன்று நான் அமெரிக்காவிற்குள் நுழைந்தேன். அமெரிக்காவிற்குள் நுழைந்த 2-3 மணி நேரத்திற்குள் நானும் என்னுடன் இருந்தவர்களும் போலீசாரால் பிடிக்கப்பட்டோம்.
அவர்கள் எங்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர், 2-3 மணி நேரத்திற்குப் பிறகு, நாங்கள் ஒரு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். நாங்கள் 15-18 நாட்கள் முகாமில் வைக்கப்பட்டோம்.
எங்கள் பேச்சைக் யாரும் பொருட்படுதவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு, எங்களை வேறு முகாமுக்கு மாற்றுவதாகக் கூறப்பட்டது. நாங்கள் விமானத்தில் ஏறியதும், எங்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புவதாகக் கூறப்பட்டது.
அங்கு செல்ல கிட்டத்தட்ட ரூ.45 லட்சம் செலவிட்டேன். இதற்காக என் பெற்றோர் 2 ஏக்கர் நிலங்களை விற்று, உறவினர்களிடமிருந்து பணம் கடன் வாங்கினார்கள். ஆனால் அதெல்லாம் சில மணி நேரங்களில் வீணானது. அரசு தான் எங்களுக்கு உதவ வேண்டும்.
இவ்வாற அவர் தெரிவித்தார்.
மேலும் தனது பயணம் குறித்து விவரித்த சவுரப், நான் டிசம்பர் 17 அன்று இந்தியாவை விட்டு வெளியேறினேன். ஏஜெண்டுகளால் முதலில் நான் மலேசியாவுக்குச் அழைத்துச்செல்லப்பட்டேன். அங்கு நான் ஒரு வாரம் தங்கினேன்.
பின்னர் அடுத்த விமானத்தில் மீண்டும் மும்பைக்கு அழைத்து வரப்பட்டேன். அங்கு நான் 10 நாட்கள் தங்கினேன். மும்பையிலிருந்து, நான் ஆம்ஸ்டர்டாமுக்கும், பின்னர் பனாமாவிலிருந்து தபச்சுலாவுக்கும்(Tapachula) அங்கிருந்து பின்னர் மெக்சிகோ நகரத்திற்கும் அழைத்துச்செல்லப்பட்டேன்.
மெக்சிகோ நகரத்திலிருந்து எல்லையைக் கடக்க எங்களுக்கு 3-4 நாட்கள் ஆனது.. பிடிபட்ட பின் நாங்கள் அமெரிக்க அதிகாரிகளுடன் ஒத்துழைத்தோம்.
ஆனால் எங்கள் முறையீடுகளை யாரும் கேட்கவில்லை. எங்கள் கைகளும் கால்களும் கட்டப்பட்டிருந்தன. நாங்கள் முகாமில் இருந்தபோது எங்கள் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. எங்களது குடும்பத்தை தொடர்பு கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது என்று தெரிவித்தார்.